2014-08-09 15:08:53

பொதுக்காலம் 19ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 உங்களில் யாராவது உங்கள் காது, மூக்கு, வாய் இவற்றை நேரடியாகப் பார்த்திருக்கிறீர்களா? நமது உடலில் கை, கால், வயிறு போன்ற பகுதிகளை நேரடியாகப் பார்க்க முடியும். அதே நேரம் கண், காது, மூக்கு, வாய், முதுகு என்று நம் உடலின் பல பகுதிகளை நம்மால் நேரடியாகப் பார்க்க முடியாது. அவற்றின் பிம்பங்களைத்தான் பார்க்கமுடியும். நம்மோடு பிறந்து, நம் உடலின், நம் வாழ்வின் முக்கிய அங்கங்களாக இருக்கும் இப்பகுதிகளை நாம் நேரடியாகப் பார்க்க முடியாமல் இருப்பதுபோல், நம் வாழ்வின் ஆதாரமாய், அடித்தளமாய் இருக்கும் இறைவனையும் நாம் பல நேரங்களில் பார்க்க முடியாமல் தவிக்கிறோம்.
உடலின் பல பகுதிகளை நாம் ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்ப்பதில்லை. அவ்வுறுப்புக்களில் ஏதேனும் வலி அல்லது பிரச்சனை என்று வரும்போது மட்டுமே அவற்றைப் பற்றிய சிந்தனைகள் நமக்கு எழுகின்றன. அதேபோல், வாழ்க்கையில் வலி ஏற்படும் வேளைகளில் நாம் இறைவனைத் தேடுகிறோம் என்பதும் உண்மை. வாழ்வில் துன்பங்கள், போராட்டங்கள் சூழும் நேரங்களில் நம் கடவுள் கண்ணாமூச்சி விளையாடுவது போல, அல்லது காணாமற் போய்விட்டதைப் போல உணர்கிறோம். ஆனால், உண்மை என்ன? நாம் நேரடியாகப் பார்க்கமுடியாவிட்டாலும், நாம் அவற்றைப் பற்றி அடிக்கடி எண்ணிப்பார்க்கவில்லை என்றாலும், நம் உடலின் பகுதிகளாய் இருக்கும் பல உறுப்புக்களைப் போல், நம் கடவுளும் எங்கும், எப்போதும் நம் முன், நம்மைச் சுற்றி இருக்கிறார். மறுக்கமுடியாத இந்த உண்மையை நம் உள்ளத்தில் இன்னும் ஆழமாய் பதிக்க இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு உதவியாக இருக்கும். நம் வாழ்வில் எவ்வடிவில் எவ்வகையில் கடவுள் உடன் இருக்கிறார் என்ற உண்மையை, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியா வழியாகவும், நற்செய்தியில் புனித பேதுரு வழியாகவும் கற்றுக்கொள்ள முயல்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கும் இறைவாக்கினர் எலியா, தன் உயிருக்குப் பயந்து குகையில் ஒளிந்திருக்கிறார். பாகால் என்ற தெய்வத்திற்குப் பணி செய்த பொய்வாக்கினர்களை நூற்றுக் கணக்கில் பழி தீர்த்த இறைவாக்கினர் எலியா, (அரசர்கள் முதல் நூல் 18: 40) அரசன் அல்லது அரசி ஆகியோரின் கையால் இறப்பதற்குப் பதில், இறைவன் கையால் இறப்பதே மேல் என்ற தீர்மானத்தில், குகையில் ஒளிந்து கொண்டிருந்தார். அந்நேரத்தில், குகையைவிட்டு வெளியே வந்து, தன்னைச் சந்திக்கும்படி இறைவன் எலியாவுக்கு அழைப்பு விடுக்கிறார். குகைக்கு வெளியே இறைவனைச் சந்திக்க வரும் எலியா, சுழல்காற்று, நிலநடுக்கம், தீ ஆகியவற்றைக் காண்கிறார். இவை எதிலும் இறைவன் இல்லை. இவற்றிற்குப் பின் வந்த ‘அடக்கமான மெல்லிய ஒலி’யில் (1 அரசர்கள் 19: 12-13) இறைவனின் அழைப்பை எலியா கேட்கிறார்.
சக்தி வாய்ந்த அரசனை, அரசியை எதிர்த்து, தன்னைக் காக்கவரும் இறைவன் சக்தியின் வெளிப்பாடுகளான சுழல்காற்று, நிலநடுக்கம், தீ இவற்றின் வழியே வரவேண்டும். இதுதான் இறைவாக்கினரின் எதிர்பார்ப்பு. நமது நியாயமான எதிர்ப்பார்ப்பும் இதுவே. இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, மெல்லிய ஒலியில் இறைவன் இறைவாக்கினரைச் சந்தித்தது எலியாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்ல பாடம். நாம் எதிர்பார்க்கும் வழிகளில் வராமல், எதிர்பாராத விதமாய் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதே இறைவனின் அழகு.

இதையே இன்றைய நற்செய்தி நிகழ்ச்சியிலும் நாம் காண்கிறோம். இயேசு கடல்மீது நடந்தது, பேதுரு கடல்மீது நடக்க முயன்றது ஆகிய நிகழ்வுகள் இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளன. இயேசு 5000 பேருக்கு உணவளித்த பிறகு அன்று மாலை அல்லது இரவே இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளே நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகின்றன. இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். (மத்தேயு நற்செய்தி 14: 22) பசியாலும் நோயாலும் வாடியிருந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்த இயேசு உடனே அவ்விடத்தை விட்டு அகல நினைக்கிறார். அது மட்டுமல்ல. தன் சீடர்களையும் அவ்விடத்தைவிட்டு செல்லும்படி கட்டாயப்படுத்துகிறார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இயேசுவின் இந்த அவசரத்திற்கான காரணத்தை யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. யோவான் நற்செய்தியில் 5000 பேருக்கு உணவளித்ததும், எழுதப்பட்டுள்ள வரிகள் இவை:
யோவான் நற்செய்தி: 6: 14-15
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப் புகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்" என்று உரக்கச் சொல்லியிருக்கலாம். இதுவரை இயேசுவின் சொல்திறமையைக் கண்டு வியந்தவர்கள், இன்று அவர் செயல் திறமையையும் கண்டனர். 5000 பேருக்கு உணவளித்த அந்தப் புதுமை, இயேசுவின் மீது இருந்த மதிப்பை இன்னும் பல மடங்காக உயர்த்தியது. இயேசு அவர்களது எண்ணங்களை, அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தைப் பார்த்தார். அவர்கள் மத்தியிலிருந்து நழுவிச் சென்றார். கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள் ஒருவருக்குக் கோவில் கட்ட கற்களைத் திரட்டும். அல்லது அதே கற்களை எறிந்து அவரைக் கொன்று சமாதியும் கட்டும். இதை நன்கு உணர்ந்திருந்த இயேசு அங்கிருந்து அகன்று சென்றார். எதற்காக? தன் தந்தையுடன் உறவாட, உரையாட...
மின்னல் கீற்று போல சிந்தனை ஒன்று எனக்குள் பளிச்சிடுகிறது. வாழ்க, வாழ்க என்று கூட்டங்கள் எழுப்பும் ஆரவாரத் துதிகளிலேயே மயங்கி, கனவுகாணும் நமது தலைவர்கள் அவ்வப்போது இப்படி கூட்டத்திலிருந்து தப்பித்துப் போய், தனியே தங்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் அமைதியாய் சிந்தித்தால், எவ்வளவு பயன் கிடைக்கும்? ஹூம்... அன்பர்களே, இப்போது நீங்கள் கேட்டது… என் ஏக்கப் பெருமூச்சு.

தந்தையோடு தனியே உறவாடச் சென்ற இயேசு அங்கேயேத் தங்கி விடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடி வந்தார். அதுவும், கடல் மீது நடந்து வந்தார். கடல் மீது நடப்பது என்ற உருவகம், தீய சக்திகள் அனைத்தையும் தன் காலடிக்குக் கொணர்தல் என்ற கருத்தை உணர்த்தும் ஓர் உருவகம். உரோமையப் பேரரசைக் கவிழ்க்க உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள் என்ற விண்ணப்பத்தோடு இயேசுவை அரசராக்க நினைத்த மக்களிடமிருந்து தப்பித்தார் இயேசு. காரணம்? அவரது சக்தியை உரோமைய அரசுக்கு எதிராக மட்டும் பயன்படுத்துவதை இயேசு விரும்பவில்லை. மாறாக, இவ்வுலகின் தீய சக்திகளுக்கு எதிராக, தன் சக்தியைப் பயன்படுத்துவதையே அவர் விரும்பினார். இந்தச் சக்திகளைத் தன் காலடிக்குக் கொண்டு வருவதைக் காட்டும் வகையில் இயேசு கடல் மீது நடந்தார்.

கடல் மீது நடந்து வருவது இயேசுதான் என்பதைச் சீடர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்களது எண்ணங்கள், பார்வைகள் எல்லாம் அவர்களைச் சூழ்ந்தெழுந்த கடல் அலைகளிலும் சுழற்றியடித்த காற்றிலும் இருந்ததால், கடவுளை அவர்களால் பார்க்க முடியவில்லை. நம்மைச் சூழ்ந்து பயமுறுத்தும் துன்பங்களையும், போராட்டங்களையும் மட்டுமே பார்த்துவிட்டு, கடவுளைப் பார்க்கமுடியாமல் தவித்த நேரங்கள் எத்தனை, எத்தனை? கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப் போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்?
எப்போதோ வாசித்த ஓர் உவமைக் கதை இது. மனிதன் ஒருவன் தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்கு சான்றாக பாதை முழுவதும் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு சில நேரங்களில் அந்தப் பாதையில் ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே அம்மனிதன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். "மகனே, பெரும் அலைகளாய் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்." என்றார் கடவுள்.

மத்தேயு இன்னுமொரு புதுமையை இங்கு சேர்க்கின்றார். அந்தப் பகுதியைக் கூறும் நற்செய்தியைக் கேட்போம்.
மத்தேயு நற்செய்தி 14: 26-32
அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார். பேதுரு அவருக்கு மறுமொழியாக, 'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்றார். அவர், 'வா' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, 'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?' என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, 'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர்.

சிறு குழந்தைகளைப் பெரியவர்கள் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் விளையாட்டைப் பார்த்திருப்போம். அந்தக் குழந்தை எவ்வித பயமும் இல்லாமல், சிரித்தபடியே வானத்தில் பறப்பதுபோன்ற காட்சி அழகாய் இருக்கும். அப்பாவோ, அம்மாவோ அருகிருக்கிறார்கள் என்று தெரிந்தால் குழந்தைகளுக்கு அசாத்திய வீரம் வந்துவிடும்.
கடும்குளிர் காலத்தில் ஒரு நாள். நள்ளிரவில், ஊருக்கு ஓரத்தில் இருந்த அந்த வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த குழந்தைகளையெல்லாம் எழுப்பி, தந்தையும் தாயும் வீட்டுக்கு வெளியே விரைந்தனர். அந்த அவசரத்தில் ஒரு குழந்தையை மாடியில் விட்டுவிட்டு வெளியேறி விட்டனர். சன்னலருகே வந்து அழுது கொண்டிருந்த அச்சிறுமியை தந்தை சன்னல்வழியே குதிக்கச் சொன்னார்.
சிறுமி அங்கிருந்து, "அப்பா, ஒன்னும் தெரியலியே. ஒரே இருட்டா, புகையா இருக்கே. எப்படி குதிக்கிறது?" என்று கத்தினாள். அப்பா கீழிருந்தபடியே, "உனக்கு ஒன்னும் தெரியலனாலும் பரவயில்லமா. தைரியமா குதி. என்னாலே ஒன்னைப் பார்க்க முடியுது. குதிம்மா" என்று தைரியம் சொன்னார். தந்தை சொன்னதை நம்பி குதித்தாள் சிறுமி... தந்தையின் பாதுகாப்பான அரவணைப்பிற்குள் தஞ்சம் பெற்றாள்.

“நானும் நீரில் இறங்கி நடக்கவா?” என்று பேதுரு ஒரு குழந்தைபோல பேசுகிறார். இயேசுவும் குழந்தையாக மாறி ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். தண்ணீரில் நடப்பதே ஒரு சாதனை. அதுவும் புயல், அலை எனச் சுற்றிலும் பயமுறுத்தும் சூழலில் இயேசு பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது பெரியதொரு சவால்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றோர் அம்சம் என்னவென்றால், இயேசு பேதுருவுக்கு அந்தச் சவாலான அழைப்பைத் தருவதற்கு முன்பு காற்றையும், கடலையும் அமைதி படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.
வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பிறகுதான் இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு; மாறாக அந்தப் புயலின் நடுவில் இறைவன் காத்துக்கொண்டிருப்பார்; துணிந்து சென்று அவரைச் சந்திக்கலாம் என்பதை இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித் தருகிறார்.
பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். அஞ்சாதீர்கள், துணிந்து வாருங்கள்.... புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார்.







All the contents on this site are copyrighted ©.