2014-08-09 14:40:38

திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயணம் ஆசிய இளையோர் மத்தியில் மறைப்பணி ஆர்வத்தைத் தூண்டிவிடும், தெஜோன் ஆயர்


ஆக.09,2014. வருகிற புதன்கிழமை மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடங்கவிருக்கும் தென் கொரியத் திருப்பயணத்துக்கு சிலர், அரசியல் நோக்குகளை வெளியிட்டுவரும்வேளை, இத்திருப்பயணம் ஆசிய இளையோர் மத்தியில் நற்செய்திப் பணிக்குப் புதிய உந்துதல் அளிப்பதாக அமையும் என அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
தூர கிழக்கு நாட்டுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் இத்திருப்பயணம் கொரியாவிலும் ஆசியாவிலும் இருக்கின்ற இளையோரைச் சந்திப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என, தெஜோன் ஆயர் Lazzaro You Heung-sik தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
தெஜோன் மறைமாவட்டத்தில் ஆசிய இளையோர் மாநாடு நடக்கும் நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகை தந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, திருத்தந்தைக்கும், திருப்பீடச் செயலருக்கும் தான் எழுதிய கடிதங்களையும், அதற்கு, தனக்குக் கிடைத்த பதில் கடிதங்களையும் குறிப்பிட்டுள்ளார் ஆயர் Heung-sik.
தென் கொரியாவின் தெஜோன் மறைமாவட்டத்தில் இம்மாதம் 10, இஞ்ஞாயிறு முதல் இம்மாதம் 17 வரை ஆசிய இளையோர் மாநாடு நடைபெறுகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் 14ம் தேதி அங்குத் திருப்பயண நிகழ்வுகளைத் தொடங்குகிறார்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.