2014-08-09 14:40:44

ஜப்பானில் அமைதி குறித்த அரசியல் அமைப்பு தொடர்ந்து காக்கப்படுமாறு ஆயர்கள் அழைப்பு


ஆக.09,2014. ஜப்பானில், அமைதி குறித்த எழுபது வருட அரசியல் அமைப்பு தொடர்ந்து காக்கப்படுமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் அணுகுண்டுகளால் அழிக்கப்பட்டதையொட்டி, அமைதிக்கான பத்துநாள்களைக் கடைப்பிடித்து செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர்கள், போரைவிட பேரழிவை ஏற்படுத்தக்கூடியதும், முட்டாள்தனமானதுமான செயல் எதுவுமில்லை என்று குறிப்பிட்டு, போருக்குச் செல்லும் தவற்றை, மனிதர்களாகிய நாம் இனிமேல் ஒருபோதும் செய்யாதிருப்போம் எனக் கேட்டுள்ளனர்.
ஜப்பான் ஒருபோதும் போருக்குச் செல்லாது என்றுரைக்கும் அந்நாட்டின் எழுபது வருட அரசியல் அமைப்பைக் கைவிடுவதற்கு, ஜப்பான் பிரதமர் தீர்மானித்துள்ளவேளை, இவ்வாண்டு அமைதிக்கான செப நாள்கள் முக்கியமானவை என்று ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.
முதல் உலகப் போர் முடிந்ததன் நூறாம் ஆண்டு இவ்வாண்டில் நினைவுகூரப்படும்வேளை, இரு உலகப் போர்களின் பேரழிவுகள் பற்றிச் சிந்திப்போம் எனவும் ஜப்பான் ஆயர்கள் கூறியுள்ளனர்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியிலும் அணுகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஹிரோஷிமாவில் 90 ஆயிரம் முதல் ஒரு இலட்சத்து 66 ஆயிரம் பேர் வரையிலும், நாகசாகியில் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரையிலும் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் : ICN







All the contents on this site are copyrighted ©.