2014-08-09 14:40:51

சிங்கப்பூர் பேராயர் : தேசிய தினத்தன்று ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுணர்வைப் புதுப்பிக்க அழைப்பு


ஆக.09,2014. நற்பண்புகளில் செல்வந்தராய் இல்லாமல் பொருளாதாரத்தில் மட்டும் வளமையாய் இருப்பதால் எவ்விதப் பயனும் இல்லையென்று, ஆகஸ்ட் 9, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட சிங்கப்பூரின் 49வது சுதந்திர தினத்தையொட்டிய அறிக்கையில் கூறியுள்ளார் சிங்கப்பூர் பேராயர் William Goh Seng Chye.
இளமையான சிறிய நாடாகிய சிங்கப்பூர் குறைந்த காலத்திலேயே உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது, ஆனால், அண்மையில் வெளியான ஓர் ஆய்வின்படி, உலகில் மகிழ்ச்சியற்ற நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் குறிக்கப்பட்டுள்ளது என்பதை தனது மேய்ப்புப்பணி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் Seng Chye.
நியுயார்க்கைவிட சிறிய நாடாகிய சிங்கப்பூர், ஆசியக் கண்டத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது, ஆயினும், செல்வம் சமமாகப் பங்கிடப்படவில்லை எனக் கூறியுள்ள பேராயர், குடிமக்கள் தங்களிடம் உள்ள மிகுதியான செல்வத்தை ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோருடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியன்று மலேசியாவிலிருந்து தனிநாடாகப் பிரிந்தது சிங்கப்பூர். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 5 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். 33 விழுக்காட்டினர் புத்த மதத்தினர். 15 விழுக்காட்டினர் இஸ்லாமியர். 11 விழுக்காட்டினர் தாவோயிச மதத்தினர், 5 விழுக்காட்டினர் இந்து மதத்தினர்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.