2014-08-09 14:40:31

ஈராக் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறு உலகின் கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள்


ஆக.09,2014. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஈராக்கில் இன்று கிறிஸ்தவர்கள் யாருமே இல்லை என்ற நிலை காணப்படுகின்றவேளை, இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கடும் துன்பங்களை எதிர்கொள்ளும் ஈராக் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், பிரிட்டன் ஆயர்கள், ஐரோப்பிய ஆயர்கள் உட்பட நாடுகளின் கத்தோலிக்கத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதோடு துன்புறும் அம்மக்களுடனான தங்களின் ஒருமைப்பாட்டுணர்வையும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் 17ம் தேதியன்று ஈராக் கிறிஸ்தவர்களுக்காகச் சிறப்பாகச் செபிக்குமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் தங்களின் மறைமாவட்ட விசுவாசிகளைக் கேட்டுள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாடு, வட ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது மேலும் இரண்டு முறை வான் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றது. அதேநேரம், அமெரிக்கா, வட ஈராக்கின் சின்ஜார் பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இரண்டாவது முறையாக தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை விமானம் மூலம் வழங்கியுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.