2014-08-08 16:02:59

பயணிகள் இரயில்களில் பசுமை கழிப்பறை வசதி


ஆக.08,2014. இந்தியாவில், மனிதக் கழிவுகள் தண்டவாளப் பகுதியில் விழுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, சுகாதாரச் சீர்கேடு ஆகியவற்றைத் தவிர்க்க அனைத்து பயணிகள் இரயில்களிலும் பசுமை கழிப்பறை அமைப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு இரயில்வே துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த டி.தர்பார் ராஜா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு ஒன்றில், நாடு முழுவதும் தினமும் 40 ஆயிரம் இரயில்கள் இயக்கப்படுகின்றன. 20 கோடி மக்கள் இரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு மிக அருகில் வாழ்கின்றனர். இரயில்களில் உள்ள கழிப்பறைகளை, தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துகின்றனர். இதனால் தினமும் 400 டன் என்ற வகையில் ஆண்டுக்கு 1.46 லட்சம் டன் மனிதக் கழிவுகள் இந்தியா முழுவதும் இரயில் தண்டவாளப் பகுதிகளில் தேங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்தியாவில் அனைத்து பயணிகள் ரயில்களிலும் பசுமை கழிப்பறை அமைப்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய இரயில்வே துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கழிவுகளில் இருந்து 6 மில்லியன் வைரஸ் மற்றும் நுண்கிருமிகள் காற்றில் பரவுகின்றன. இதனால் இரயில் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தண்டவாளங்களுக்கு மிக அருகில் வாழ்பவர்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். தவிர, தண்டவாளப் பகுதியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் வாழ்பவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர் எனவும் அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனிதக் கழிவுகள் நீருடன் கலப்பதால் அந்தத் தண்ணீரைப் பருகும் மக்களுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன. வெயில் காலத்தில் இந்தக் கழிவுகள் பவுடராக மாறி காற்றில் பரவுவதால், அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கு கழிவுகளில் கலந்துள்ள வைரஸ், பாக்டீரியாக்கள் தாக்கி நோய்கள் பரவுகின்றன. தவிர ரயிலுக்குள் பயணம் செய்வோர், குடிநீர் அருந்துவோர் என அனைவரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன என அம்மனுவில் சொல்லப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.