2014-08-08 15:55:33

திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயணம் குறித்த விபரங்கள்


ஆக.08,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மாதம் 13ம் தேதி தொடங்கும் தென் கொரியாவுக்கான திருப்பயணம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
இம்மாதம் 13 முதல் 18 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் தென் கொரியாவுக்கான திருப்பயணம், அவரின் மூன்றாவது வெளிநாட்டுத் திருப்பயணமாகவும், இந்த ஆசிய நாட்டுக்கு ஒரு திருத்தந்தை மேற்கொள்ளும் மூன்றாவது திருப்பயணமாகவும் அமைகின்றது.
1984 மற்றும் 1989ம் ஆண்டுகளில், தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தென் கொரியாவில் ஐந்து நாள்கள் தங்கி 6வது ஆசிய இளையோர் மாநாட்டில் கலந்து கொள்வார்.
அதோடு, தென் கொரியாவுக்கு கிறிஸ்தவ விசுவாசத்தை முதலில் கொண்டுவந்த அந்நாட்டின் பெருமளவான மறைசாட்சிகளையும் இத்திருப்பயணத்தின்போது அருளாளர் நிலைக்கு உயர்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், 1953ம் ஆண்டில் முடிவடைந்த கொரியச் சண்டையில் இரண்டாகப் பிரிந்த இரு கொரிய நாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் ஒப்புரவை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கத்தையும் இத்திருப்பயணம் கொண்டுள்ளது.
திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயணம் குறித்த விபரங்களை பத்திரிகையாளர் கூட்டத்தில் வெளியிட்டார் திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.
இம்மாதம் 13ம் தேதி உரோம் நேரம் மாலை 4 மணிக்குப் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 11 மணி 30 நிமிடங்கள் விமானப்பயணம் செய்து 14ம் தேதி உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, செயோல் நகரைச் சென்றடைவார். இந்த 5 நாள் திருப்பயணத் திட்டங்களை நிறைவுசெய்து 18ம் தேதி மாலை 5.45 மணிக்கு உரோம் வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.