2014-08-08 15:40:46

திருத்தந்தை பிரான்சிஸ் : ஈராக்கில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவுமாறு அனைத்துலக சமுதாயத்துக்கு அழைப்பு


ஆக.08,2014. வட ஈராக்கில், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் மிகவும் துன்புறும் மக்களுடன் தனது ஆன்மீகமுறையிலான நெருக்கத்தையும், திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வையும் வெளிப்படுத்துவதற்கென தனது பிரதிநிதியாக அந்நாடு செல்வதற்கு, கர்தினால் Fernando Filoni அவர்களை இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நள்ளிரவில் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மக்கள் எதிர்நோக்கும் கடும் மனிதாபிமான நெருக்கடிகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கும், வன்முறையால் அச்சுறுத்தப்படும் இம்மக்களைப் பாதுகாப்பதற்கும், பிறரின் ஒருமைப்பாட்டுணர்வைச் சார்ந்து வாழும் புலம் பெயர்ந்துள்ள இம்மக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுவதற்கும் அனைத்துலக சமுதாயம் முயற்சிகள் எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா மக்கள் மற்றும் ஒவ்வொரு விசுவாசியின் மனசாட்சிக்கு இந்த விண்ணப்பத்தை விடுத்துள்ளார் என்று, அருள்பணி லொம்பார்தி அவர்கள் பத்திரிகையாளரிடம் கூறினார்.
இதற்கிடையே, ஈராக்கின் நினிவே மாநிலத்தின் காரகோஷ் நகரிலிருந்து குர்திஷ் படைகள் பின்வாங்கியதையடுத்து, ஒரே இரவில் ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினர் அந்நகரைக் கைப்பற்றினர். இப்புதன் இரவில் நடந்த இவ்வன்முறையினால் கலக்கமடைந்த ஏறக்குறைய ஒரு இலட்சம் கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு கிராமங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.