2014-08-08 15:55:27

ஈராக் கிறிஸ்தவர்கள், இனப்படுகொலை ஆபத்தைச் சந்திக்கின்றனர், முதுபெரும் தந்தை சாக்கோ


ஆக.08,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் காரகோஷ் நகரை இஸ்லாம் தீவிரவாதிகள் கைப்பற்றியதையடுத்து அந்நகரை விட்டு வெளியேறும் கிறிஸ்தவர்களுக்கு இப்பயணம் ஒரு சிலுவைப்பாதை என விளக்கியுள்ளார் ஈராக் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.
ஒரு பெரும் மனிதாபிமானப் பேரிடரை எதிர்கொள்ளும் இக்கிறிஸ்தவர்கள், ஓர் உண்மையான இனப்படுகொலையைச் சந்திக்கும் ஆபத்தால் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று இவ்வியாழனன்று திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், இக்கிறிஸ்தவர்களுக்கு தண்ணீரும், உணவும், குடியிருப்பும் தேவைப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகள் கடந்த ஜூலை 18ம் தேதி மோசுல் நகரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும், பிற சிறுபான்மை இனத்தவரும் மோசுல் நகரிலிருந்து வெளியேறினர். தற்சமயம் இஸ்லாம் தீவிரவாதிகள், நினிவே மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் குர்திஷ் இனத்தவரின் நகரங்களுக்குச் சென்று அங்கிருந்தும் மக்களை வெளியேற்றி வருகின்றனர்.
இஸ்லாம் தீவிரவாதிகள், கிறிஸ்தவ ஆலயங்களைக் கைப்பற்றி, 1500 மதப் பிரச்சாரக் கையேடுகளைத் தீ வைத்து எரித்துள்ளனர். தற்போது ஈராக்கில் 15 நகரங்கள் தீவிரவாதிகள் பிடியில் உள்ளன.
இஸ்லாம் தீவிரவாதிகள், காரகோஷி நகரை தங்களின் இஸ்லாமிய நாட்டின் தலைநகராக அறிவித்துள்ளனர் எனவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.