2014-08-08 15:47:42

ஈராக் கிறிஸ்தவர்களுக்காக, திருத்தந்தை விடுத்துள்ள அழைப்புக்கு கர்தினால் சாந்திரி நன்றி


ஆக.08,2014. கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஈராக் கிறிஸ்தவர்களுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள இவ்வழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி.
விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள, ஈராக்கின் நினிவே பகுதியிலுள்ள கிராமங்களிலிருந்து ஒரே இரவில் புலம்பெயர்ந்துள்ள இம்மக்களின் மனித மாண்புக்கு எதிராக மிருகத்தனமான செயல்கள் நடந்து வருகின்றன என்று கவலை தெரிவித்துள்ளார் கர்தினால் சாந்திரி.
மிகவும் கொடூரமான சூழல்களில் வாழும் இம்மக்களின் துயரங்களைத் துடைப்பதற்கு அனைத்துலக சமுதாயமும், அதிகாரிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் காலம் தாழ்த்தாது நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் கர்தினால் சாந்திரி.
இதற்கிடையே, வட ஈராக்கில் செயல்பட்டுவரும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்த, தான் உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும், மதச் சிறுபான்மையினர் கொல்லப்படுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/ BBC







All the contents on this site are copyrighted ©.