2014-08-08 15:57:31

இஸ்லாம் தீவிரவாதிகளின் அத்துமீறல் ஊடுருவல்களுக்கு எதிராக லெபனன் ஆயர்கள்


ஆக.08,2014. சிரியாவின் எல்லைப்பகுதியில் இஸ்லாம் தீவிரவாதிகளின் அத்துமீறல் ஊடுருவலுக்கு எதிராக லெபனன் இராணுவம் போரிட்டுவரும்வேளை, லெபனன் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளின்மீது தாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தனர் லெபனன் ஆயர்கள்.
சிரியாவுடன் தொடர்புடைய அல்-கெய்தாவைச் சேர்ந்த ஒரு மனிதர், லெபனனில் கைது செய்யப்பட்டதையடுத்து, இம்மாதம் 2ம் தேதி பெய்ரூட்டுக்கு ஏறக்குறைய 55 மைல்கள் தூரத்திலுள்ள ஆர்சல் பகுதியில் மோதல்கள் வெடித்துள்ளன. இத்தாக்குதல்களில் குறைந்தது 15 லெபனன்படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 80 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 22 பேர் காணாமற்போயுள்ளனர்.
இஸ்லாம் தீவிரவாதிகளின் அத்துமீறல் ஊடுருவல்களுக்கு எதிராக தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ள லெபனன் ஆயர்கள், லெபனன் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குத் தங்களின் முழு ஆதரவைத் தெரிவிப்பதாகவும், அவை தங்களின் அனைத்து அரசியல் அதிகாரத்தையும் பயன்படுத்தி பதட்டநிலைகள் அகற்றப்படுவதற்கு உதவுமாறும் கேட்டுள்ளனர்.
லெபனன் இராணுவம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்குத் தேவையான ஆதரவை நட்பு நாடுகள் வழங்குமாறும் கேட்டுள்ளனர் ஆயர்கள்.
இஸ்லாம் தீவிரவாதிகளால் சிரியா நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள லெபனன் ஆயர்கள், இத்தகைய அச்சுறுத்தல்கள், இரண்டாயிரம் ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களின் இருப்பை காலி செய்யக்கூடும் எனவும் கூறியுள்ளனர்.
ஏறக்குறைய நாற்பதாயிரம் சுன்னி முஸ்லிம் பிரிவினர் வாழும் ஆர்சல் நகரத்தின் மக்கள் தொகை, சிரியா அகதிகள் மற்றும் புரட்சியாளர்களின் இருப்பால் தற்போது மூன்று மடங்காகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.