2014-08-08 15:35:33

ஆக.09, 2014. புனிதரும் மனிதரே. - கிறிஸ்தவ சமூகப் பணியாளர்களின் பாதுகாவலர் (St. Louise de Marillac)


லூயிஸ் டி மரிலாக், பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் 1591ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்தார். சிறு வயதிலேயே, இவர் பெற்றோரை இழந்தாலும், நல்ல முறையில் வளர்க்கப்பட்டார். பெரிய துறவற மடம் ஒன்றில் கல்வி பயின்றார். இதனால் இவருக்கு துறவற வாழ்வில் ஆர்வம் ஏற்பட்டது. திருப்பாடுகளின் புதல்விகள் என்ற துறவற சபையில் சேர இவர் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, இல்லற வாழ்வில் ஈடுபடுமாறு குடும்பத்தினர் இவரை அறிவுறுத்தினர்.
1617ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, ஆன்டனி லீ க்ராஸ் என்பவரை மரிலாக் திருமணம் செய்து, மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு மைக்கேல் என்ற குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் இவரது கணவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். மரிலாக், தனது கணவரை அன்புடன் கவனித்துக் கொண்டார். ஆனாலும் கடவுளுக்காக துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவரது மனதில் தொடர்ந்து நீடித்தது. 2 ஆண்டுகள் வேதனைக்குப் பின்பு இவரது கணவர் மரணம் அடைந்தார். அந்த வேளையில் லூயிஸ் டி மரிலாக், புனித வின்சென்ட் தெ பவுலை சந்திக்க நேரிட்டது. அதன்பின் ஏழைகளுக்கும் தேவையில் இருப்பவர்களுக்கும் உதவி செய்யும் விதத்தில், இவர் துறவற வாழ்வை மேற்கொண்டார். புனித வின்சென்ட் தெ பவுலுடன் இணைந்து, பிறரன்பின் புதல்வியர் என்ற துறவற சபையைத் தோற்றுவித்தார்.
இவருடன் சேர்ந்து உழைத்த துறவற சபை அருள்சகோதரிகள், பாவிகளை மனந்திருப்புவதிலும், ஏழைகளுக்கு உதவி செய்வதிலும் ஆர்வமுடன் உழைத்தனர். நோயாளிகளைக் கவனிக்க மருத்துவ மனைகளும், ஆதரவற்றோரைக் கவனிக்க முதியோர் இல்லங்களும் இச்சபை சார்பில் அமைக்கப்பட்டன.
இயேசு கிறிஸ்துவின் பெயரால், மக்களுக்கு சேவைகள் செய்து வந்த லூயிஸ் டி மரிலாக் 1660ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி மரணம் அடைந்தார். 1920ம் ஆண்டு மே 9ம் தேதி, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 1934ம் ஆண்டு மார்ச் 11ம் நாள், திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.
1960ம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் இவரை கிறிஸ்தவ சமூகப் பணியாளர்களின் பாதுகாவலராக அறிவித்தார். புனித லூயிஸ் டி மரிலாக்கின் அழியாத உடல், பாரிஸ் நகரில் இவர் வாழ்ந்த துறவற சபையின் சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.