2014-08-07 14:24:11

புனிதரும் மனிதரே: பேச்சுத் திறமையால் மெய்யியலாளர்களை வாயடைத்தவர்(St. Catherine of Alexandria)


கி.பி. நான்காம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசர் Maxentius, சிலைகளை வழிபட மறுத்த கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தார். இவர் செய்யும் தவற்றைச் சுட்டிக்காட்டி அவரைத் திருத்த விரும்பினார் எகிப்தின் அலெக்சாந்திரியா இளவரசி கத்ரீன். ஒருநாள் இளவரசி கத்ரீன், பேரரசர் Maxentiusஐ சந்தித்து அவர் செய்வது நன்னெறிப்படி தவறு எனச் சுட்டிக்காட்டினார். இதில் வெகுண்டெழுந்த Maxentius, கத்ரீனுடன் வாதாடுவதற்காக, பேச்சாளர்களையும் மெய்யியலாளர்களையும் ஏற்பாடு செய்தார். ஆனால் அந்த விவாதத்தில் கத்ரீனே வென்றார். அதோடு, கத்ரீனின் பேச்சுவன்மையால் ஈர்க்கப்பட்ட அவரின் பகைவர்களில் பலர் தங்களை கிறிஸ்தவர்கள் என அறிவித்தனர். உடனடியாக அவர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இளவரசி கத்ரீனும் சவுக்கால் அடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தன்னைச் சந்திக்க வந்த பேரரசர் Maxentiusன் மனைவி உட்பட 200க்கும் அதிகமானவர்களைக் கிறிஸ்தவத்துக்கு மாற்றினார் கத்ரீன். அவர்களும் உடனடியாகக் கொல்லப்பட்டனர். பல வகையான சித்ரவதைகள் மத்தியிலும், விசுவாசத்தில் உறுதியாக இருந்தார் இளவரசி கத்ரீன். இளவரசியின் அழகிலும் அறிவிலும் மயங்கிய பேரரசர் Maxentius, கத்ரீனைத் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார். அதற்கு இளவரசி கத்ரீன், கிறிஸ்துவே தனது மணமகன் என்று சொன்னார். இதில் கோபமடைந்த பேரரசர், இளவரசி கத்ரீனைச் சக்கரத்தில் சுற்றிக் கொலைசெய்யுமாறு கட்டளையிட்டார். ஆனால் அந்தச் சக்கரத்தை கத்ரீன் தொட்டவுடன் அது உடைந்துபோனது. பின்னர் இளவரசி கத்ரீனைத் தலைவெட்டிக் கொன்றனர். அலெக்சாந்திரியாவின் மறைசாட்சி இளவரசி புனித கத்ரீன், சக்கரத்தின் புனித கத்ரீன் என்றும், பெரிய மறைசாட்சி புனித கத்ரீன் என்றும் அழைக்கப்படுகிறார். கி.பி. 282ம் ஆண்டில் பிறந்த இளவரசி கத்ரீன் தனது பதினான்காவது வயதில் கிறிஸ்தவரானார். மிகுந்த அறிவாளியான கத்ரீன், கலைகள், அறிவியல், மெய்யியல் போன்றவற்றிலும் சிறந்திருந்தார். கத்ரீன், எகிப்தின் அலெக்சாந்திரியாவை ஆட்சி செய்துவந்த அரசர் கோஸ்டஸ், அரசி சபினெல்லா தம்பதியரின் மகள். வேற்று தெய்வங்களை வணங்கிவந்த இவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்தபோது அதில் விருப்பமில்லாத கத்ரீன் அதை வேறு விதமாக வெளிப்படுத்தினார். தன்னைவிட அழகிலும், அறிவிலும், செல்வத்திலும், மாண்பிலும் உயர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக அறிவித்தார். அலெக்சாந்திரியாவின் புனித கத்ரீன் கி.பி.305ம் ஆண்டில் கொல்லப்பட்டார். இவரின் விழா நவம்பர் 25.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.