2014-08-07 16:22:13

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், சிரியாவின் Aleppo பேராயர் சந்திப்பு


ஆக.07,2014. மின்சக்தி, தண்ணீர் வசதி ஏதும் இல்லாத நிலையில், அடுத்தத் தாக்குதல் எப்போது நிகழும் என்ற பதைபதைப்புடன் வானத்தைப் பார்த்தபடியே வாழும் மக்களே Aleppo நகரில் உள்ளனர் என்று Aleppo பேராயர் Boutros Marayati அவர்கள் கூறினார்.
சிரியாவின் உள்நாட்டுப் போரினால் கடந்த மூன்றாடுகளுக்கும் மேலாக துன்பங்களை அனுபவித்து வரும் Aleppo நகரில் ஆர்மேனிய கத்தோலிக்கப் பேராயராகப் பணியாற்றிவரும் Marayati அவர்கள், இப்புதன் பொது மறையுரைக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து, சிரியாவின் இன்றைய நிலை குறித்து விளக்கினார்.
இத்தகைய வன்முறைகளின் மத்தியிலும், தன் உயர் மறைமாவட்டத்தில் மறைக்கல்வி வகுப்புக்களை நடத்தி வரும் Yaghlji Gemma என்ற இளம் தாய் ஒருவரை, பேராயர் Marayati அவர்கள், திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
எளிய மக்களிடம் விளங்கும் நம்பிக்கை, சிரியா தலத்திருஅவைக்கு பெரும் உந்து சக்தியாக விளங்குகிறது என்று பேராயர் Marayati அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.