2014-08-07 16:19:47

திருஅவையையும் உலகையும் இணைக்கும் ஒரு பாலம், திருத்தந்தை ஆறாம் பவுல் - கர்தினால் Battista Re


ஆக.07,2014. கத்தோலிக்கத் திருஅவையையும் நவீன உலகையும் இணைக்கும் ஒரு பாலமாக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் என்று கர்தினால் Giovanni Battista Re அவர்கள் கூறினார்.
1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இறைவனடி சேர்ந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் மறைவின் 36ம் ஆண்டு நிறைவு திருப்பலியில், ஆயர்கள் திருப்பேராயத்தின் முன்னாள் தலைவரான கர்தினால் Battista Re அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
அன்பு குறைந்து, வன்முறைகள் வளர்ந்து வந்த உலகில் வாழ்ந்த திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், அன்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார் என்று கர்தினால் Battista Re அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
இத்தாலியை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்ற முதல் திருத்தந்தையாகவும், ஒப்புரவை வளர்க்க புனித பூமிக்கு பயணித்த திருத்தந்தையாகவும், இவ்வுலகில் தான் ஒரு பயணி என்று, ஐக்கிய நாடுகள் அவையில் தன்னை அறிமுகம் செய்த திருத்தந்தையாகவும் ஆறாம் பவுல் அவர்கள் விளங்கினார் என்று கர்தினால் Battista Re அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.