2014-08-07 16:17:59

கொலம்பஸ் தளபதிகள் அமைப்பின் 132வது ஆண்டுக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


ஆக.07,2014. நமது கிறிஸ்தவ நம்பிக்கை அன்பினால் முழுமை பெறுவதுபோல், கொலம்பஸ் தளபதிகளாகிய (Knights of Colombus) உங்கள் உடன்பிறப்பு உணர்வு, பிறரன்புச் சேவைகளில் ஒளிர்கின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 5, இச்செவ்வாய் முதல் 7, இவ்வியாழன் முடிய, அமெரிக்காவின் Orlando நகரில் நடைபெற்ற கொலம்பஸ் தளபதிகள் அமைப்பின் 132வது ஆண்டுக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் பெயரால், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
"நீங்கள் அனைவரும் உடன்பிறந்தோர்: உடன்பிறப்பு என்ற நிலைக்கு நமது அழைப்பு" என்ற மையக் கருத்து இந்த ஆண்டுக் கூட்டத்திற்காக, கொலம்பஸ் தளபதிகள் அமைப்பினர் தேர்ந்துகொண்டது, திருத்தந்தையின் மனதுக்குப் பிடித்த ஒரு கருத்து என்று கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
132 ஆண்டுகளுக்கு முன்னர், இறையடியார் Michael McGivney அவர்களின் முயற்சியால் துவக்கப்பட்ட கொலம்பஸ் தளபதிகள் என்ற அமைப்பில் தற்போது 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
Orlando நகரில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில், 11 கர்தினால்கள், 90க்கும் அதிகமான ஆயர்கள் உட்பட, 2000க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பல்வேறு பிறரன்புச் சேவைகளில் ஈடுபட்டுவரும் கொலம்பஸ் தளபதிகள் அமைப்பினர், 2013ம் ஆண்டு ஒரு கோடியே 70 இலட்சம் டாலர்கள் திரட்டி, பல்வேறு பிறரன்புப் பணிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / CNS








All the contents on this site are copyrighted ©.