2014-08-07 16:27:37

இரயில் நடைமேடை இடையே சிக்கிய பயணியின் கால்: மக்கள் சக்தியால் பத்திரமாக மீட்பு


ஆக.07,2014. ஆஸ்திரேலியாவில் புறநகர் இரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவே சிக்கிய பயணி ஒருவரின் கால், பயணிகளின் முயற்சியால் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சிரியமடைய செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் உள்ள ஸ்டெர்லிங் இரயில் நிலையத்தில் இப்புதன் காலை வழக்கம் போல பயணிகள் அனைவரும் தங்கள் பணிகளுக்கு செல்வற்காக வந்து கூடினர். ரயில் மேடைக்கு 8.50 மணி அளவில் வழக்கம் போல புறநகர் இரயில் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் ஏறியும் இறங்கியும் கொண்டிருந்த போது, பயணி ஒருவரின் கால் இரயிலுக்கும் நடைமேடைக்கு நடுவே மாட்டிக்கொண்டது.
இதனையடுத்து, இரயில்வே நிரவாகத்திடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டு, இரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் மற்றும் அதிகாரிகள் என பலர் உதவி செய்தும், மாட்டிய காலை வெளியே எடுக்க முடியவில்லை.
அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரயிலை எதிர்புறம் சாய்க்க முடிவு செய்தனர். இரயிலின் உள்ளும் மற்றும் நடைமேடையிலும் இருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இரயிலை ஒரே மூச்சில் தள்ளவே, இரயில் ஒரு பக்கமாக சற்று சாய்ந்தது, மாட்டிய காலை அந்தப் பயணி பத்திரமாக வெளியே இழுத்தார்.
இது குறித்து இரயில்வே செய்தி தொடர்பாளர் கூறும்போது, "இது போன்ற ஒரு சம்பவத்தை நான் இதுவரை கண்டதும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து முயற்சித்ததால், பயணியை லேசான காயத்துடன் மீட்க முடிந்தது" என்றார்.
Transperth passengers rescue man at Stirling Station என்ற பெயரில், பதிவாகியுள்ள இச்சம்பவத்தின் வீடியோ, YouTubeல் தற்போது பலராலும் கண்டு, பகிரப்பட்டு வருகிறது.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.