2014-08-07 16:16:32

இயேசு சபை மீண்டும் பணியாற்றும் அனுமதி வழங்கப்பட்ட 200ம் ஆண்டு நினைவு – திருத்தந்தையுடன் திருப்பலி


ஆக.07,2014. "தன்னுடைய இதயத்திலும் அடுத்தவர் இதயங்களிலும் தான் என்பதைக் குறைத்துக் கொண்டு, ஆண்டவரை வளர விடுபவரே கிறிஸ்தவர்" என்ற வார்த்தைகளை, தன் Twitter செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 7ம் தேதி, இவ்வியாழனன்று வெளியிட்டார்.
மேலும், இயேசு சபையில் இறுதி நிலை பயிற்சியில் உள்ளவர்களைப் பயிற்றுவிப்போருடன், இவ்வியாழன் காலை, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அகில உலக இயேசு சபை தலைவர் அருள்பணி அடோல்ஃப் நிக்கோலாஸ் அவர்கள் உட்பட, பல நாடுகளைச் சேர்ந்த 26 பேர் இத்திருப்பலியில் பங்கெடுத்தனர். இவர்களில் இருவர் மதுரை இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இத்திருப்பலியின் இறுதியில் ஒவ்வொருவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் உரையாடி, கைகுலுக்கி பின்னர் அனைவரும் திருத்தந்தையுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
1773ம் ஆண்டு, ஜூலை 21ம் தேதி, திருத்தந்தை 14ம் கிளமென்ட் அவர்களால் கலைக்கப்பட்ட இயேசு சபை, 41 ஆண்டுகளுக்குப் பிறகு, 1814ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி, திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களால் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.
உரோம் நகரில், இயேசு சபையினரின் தாய் ஆலயம் என்றழைக்கப்படும் Gesu கோவிலில் அமைந்துள்ள பிரபுக்களின் சிற்றாலயத்தில், திருத்தந்தை 7ம் பயஸ் அவர்களின் முன்னிலையில், "Solicitudo omnium ecclesiarum" என்ற சுற்றுமடல் வாசிக்கப்பட்டு, இயேசு சபை மீண்டும் பணியாற்றும் அனுமதி வழங்கப்பட்டது.
இயேசு சபை மீண்டும் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் 200ம் ஆண்டு நினைவு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு சபை இன்று உலகின் ஆறு கண்டங்களின் 112 நாடுகளில் 17,287 உறுப்பினர்களைக் கொண்டு பணியாற்றி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.