2014-08-07 16:24:37

அணு ஆயதங்கள் அற்ற வருங்காலத்தை உருவாக்க ஹிரோஷிமா நம்மை மேலும் தூண்டவேண்டும் - ஐ.நா. பொதுச்செயலர்


ஆக.07,2014. கடந்த 69 ஆண்டுகளாக போரை மேற்கொள்ளாது வாழ்ந்துவரும் நாடாக நாம் திகழ்கிறோம் என்று ஹிரோஷிமா நகர மேயர் Kazumi Matsui அவர்கள், ஜப்பான் பிரதமரிடமும், மக்களிடமும் கூறினார்.
ஆகஸ்ட் 6, இப்புதனன்று, ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்டதன் 69வது ஆண்டை நினைவுகூர, பல்லாயிரம் மக்கள் அந்நகரில் அமைந்துள்ள அமைதி நினைவுச் சின்னத்தின் முன்பு கூடியிருந்தபோது, அந்நகர மேயர் Matsui அவர்கள் இவ்வாறு கூறினார்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, 70 நாடுகளின் பிரதிநிதிகளோடு, 45,000க்கும் அதிகமான மக்கள் கூடியிருந்த அக்கூட்டத்தில் பேசிய மேயர் Matsui அவர்கள், அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமா உட்பட, உலகத் தலைவர்கள் அனைவரும் ஹிரோஷிமா வந்து, அணுகுண்டின் அழிவை உணரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஹிரோஷிமாவில் 69 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அழிவுகள், அணு ஆயதங்கள் அற்ற வருங்காலத்தை உருவாக்க நம்மை மேலும் தூண்டவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் அனுப்பிய செய்தியை, ஐ.நா. உயர் அதிகாரி, Angela Kane அவர்கள் அமைதி நினைவுச் சின்னத்தின் முன்பு கூடியிருந்த மக்களிடம் வாசித்தார்.
போர்களை மேற்கொள்வதில்லை என்று ஜப்பான் நாட்டின் சட்டம் 9 கூறிவருவதை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று ஜப்பான் பாராளுமன்றத்தில் அண்மையில் விவாதங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : AsiaNews / UN








All the contents on this site are copyrighted ©.