2014-08-07 16:23:01

அச்சத்துடன் வாழ்வது, தன்னை ஒரு கைதியாக மாற்றிவிடும் - நைஜீரியப் பேராயர் கைகாமா


ஆக.07,2014. Boko Haram இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரால் உருவாகும் ஆபத்துக்களை அறிந்தபோதும், தான் மக்கள் மத்தியில் தொடர்ந்து வாழ்வதே முக்கியம் என்று நைஜீரிய ஆயர் ஒருவர் கூறினார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை மேற்கொண்டு வரும் Boko Haram வன்முறை கும்பலின் ஆபத்துக்களை துணிவுடன் எதிர்கொள்ள விரும்புவதாக Jos உயர் மறைமாவட்டத்தின் பேராயர் இக்னேசியஸ் கைகாமா அவர்கள் Aid to the Church in Need அமைப்பினருக்கு வழங்கியப் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
நைஜீரியாவில் நடைபெறும் அனைத்து பொது நிகழ்வுகளிலும் ஆயர் உடையுடன் தான் பங்கேற்பதாகக் கூறிய பேராயர் கைகாமா அவர்கள், அச்சத்துடன் தன்னை மட்டும் காத்துக்கொள்ள முயல்வது, தன்னை ஒரு கைதியாக மாற்றிவிடும் என்று குறிப்பிட்டார்.
வாழ்வில் பல வசதிகளை இழந்து, அச்சத்தில் வாழும் மக்கள் மத்தியில் ஆயரும், அருள் பணியாளர்களும் அச்சத்தை வெளிப்படுத்துவது, மக்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையைக் குலைக்கும் என்று பேராயர் கைகாமா அவர்கள் சுட்டிக்காட்டினார்.
2009ம் ஆண்டு முதல் வன்முறைகளில் ஈடுபட்டு வரும் Boko Haram குழுவால் இதுவரை 2000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; Jos நகர் பேராலயத்தில் மேமாதம் 20ம் தேதி நடைபெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை, 118 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 56 பேர் காயமுற்றுள்ளனர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.