2014-08-06 15:43:41

திருத்தந்தை பிரான்சிஸ் - குடும்பம் என்பது அன்பின் மையமாக விளங்குகிறது


ஆக.06,2014. பல்வேறு நெருக்கடிகள், பிரச்சனைகள், அவசரத் தேவைகள் ஆகியவற்றின் மத்தியிலும் குடும்பம் என்பது அன்பின் மையமாக விளங்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஆகஸ்ட் 4, இத்திங்கள் முதல், 9 வருகிற சனிக்கிழமை முடிய பானமா நாட்டில் நடைபெற்றுவரும் இலத்தீன் அமெரிக்காவின் முதல் குடும்ப மாநாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தன்னலத்தை முன்னிறுத்தும் உலகின் சக்திவாய்ந்த அமைப்புக்களின் தாக்குதல்களைச் சமாளிக்க, குடும்பம் என்ற அமைப்பு சக்திவாய்ந்ததாக உருவாக வேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
திருமண உறவு, பெற்றோர் குழந்தைகள் உறவு ஆகியவை நிரந்தரத்தன்மை கொண்டவை என்றுரைக்கும் திருத்தந்தையின் செய்தி, நிரந்தரம் என்ற எண்ணத்தை அகற்ற முயலும் உலகப் போக்குகளுக்கு எதிராக குடும்பம் என்ற பாதுகாப்பு அரண் தேவை என்று குறிப்பிடுகிறது.
குடுமபம் என்ற மையக் கருத்துடன், வருகிற அக்டோபர் மாதம் வத்திக்கானில் கூடவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, இலத்தீன் அமெரிக்காவின் முதல் குடும்ப மாநாடு நடைபெற்றுவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.