2014-08-06 15:45:47

திருத்தந்தை பிரான்சிஸ் - இறைவனின் அன்பை வெளி உலகில் பறைசாற்றுவது இளையோரின் பணி


ஆக.06,2014. தந்தையாம் இறைவன் நம்மை அன்பு செய்கிறார் என்ற செய்தியை உலகறியச் செய்யும் மக்கள் இவ்வுலகிற்கு மிகவும் தேவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கத்தோலிக்க திருவழிபாட்டு நேரங்களில் பீடத்தில் உதவிகள் செய்யும் 50,000க்கும் அதிகமான வளர் இளம் பருவத்தினரை ஆகஸ்ட் 5, இச்செவ்வாய் மாலை 6 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோரிடம் இவ்வாறு கூறினார்.
ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பீட உதவியாளர்கள், உரோமையில் நான்கு நாள் திருப்பயணத்தை மேற்கொண்டனர்.
இறைவனின் அன்பைப் பறைசாற்றும் இளையோரின் பணி, கோவிலில் பீடத்தில் மட்டும் மேற்கொள்ளப்படும் பணியல்ல, மாறாக, வெளி உலகில் இளையோர் சந்திக்கும் அனைவருக்கும் இது பறைசாற்றப்படவேண்டும் என்று திருத்தந்தை இளையோரைக் கேட்டுக் கொண்டார்.
இளையோரிடம் இயற்கையாக விளங்கும் ஆர்வம் நிறைந்த துடிப்பு, இந்தப் பணியைச் செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறியத் திருத்தந்தை, இளையோரிடம் வெளிப்படும் ஆர்வம், திருஅவையை விட்டு விலகியிருப்போரை மீண்டும் இறைவனிடம் கொணரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.
பீடப்பணிகளுக்கும் சொந்த வாழ்வின் ஏனையத் தேவைகளுக்கும் சரியான முறையில் நேரம் ஒதுக்குவது ஒரு சவால் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெர்மானிய மன நிலை உள்ளவர்களுக்கு நேரத்தை சமாளிக்கும் திறமை உண்டு என்றும் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.