2014-08-06 15:49:33

ஆகஸ்ட் 6, அறிவிக்கப்பட்டுள்ள உலக செப நாளுக்கு இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர்கள் முழுமையான ஆதரவு


ஆக.06,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் வேரோடு அழிக்கப்படும் வன்முறைகளை நிறுத்தும் ஒரு முயற்சியாக ஆகஸ்ட் 6, இப்புதனன்று உலக செப நாள் அறிவிக்கப்பட்டுள்ளதை, இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர்கள் முழுமையாக ஆதரித்துள்ளனர்.
ஈராக்கில் உள்ள கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை முதலாம் லூயிஸ் சாக்கோ அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்தைத் தொடர்ந்து, தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ள ஆயர்கள், ஆகஸ்ட் 10ம் தேதி வருகிற ஞாயிறன்றும் சிறப்பு மன்றாட்டு நாளை தலத்திருஅவை கடைபிடிக்கும் என்று அறிவித்துள்ளனர்.
1600க்கும் அதிகமான ஆண்டுகள் ஈராக் நாட்டில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள், தற்போது முதல் முறையாக தங்கள் கோவில்களையும், இல்லங்களையும் இழந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று இங்கிலாந்து வேல்ஸ் ஆயர்கள் பேரவையின் பன்னாட்டு விவகாரப் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Declan Lang அவர்கள் கூறியுள்ளார்.
விவிலியக் கலாச்சாரம் பிறந்து வளர்ந்த நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் வேரோடு நீக்கப்படுவதை உலக அரசுகள் பார்வையாளர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.