2014-08-06 15:48:17

50,000க்கும் அதிகமான பீடப் பணியாளர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு


ஆக.06,2014. ஆகஸ்ட் 5, இச்செவ்வாய் மாலை 6 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து உரோம் நகருக்கு திருப்பயணமாக வந்திருந்த 50,000க்கும் அதிகமான பீடப் பணியாளர்களை, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் சந்தித்தார்.
"நன்மை புரிய சுதந்திரம்" என்ற மையக்கருத்துடன் மேற்கொள்ளப்பட்ட இத்திருப்பயணத்தின் சிகரமாக அமைந்த இச்சந்திப்பு, மாலை செப வழிபாட்டுடன் துவங்கியது.
இவ்வழிபாட்டுக்குப் பின், இளையோரின் ஒரு சில பிரதிநிதிகள் திருத்தந்தையிடம் கேள்விகள் எழுப்பினர். தங்கள் ஒவ்வொரு நாள் பணிகளுக்கும், பீடப் பணிகளுக்கும் நேரத்தைப் பங்கிடுவது குறித்தும், திருப்பயணத்தின் மையக் கருத்தான சுதந்திரம் குறித்தும் இளையோர் கேள்விகள் எழுப்பினர்.
பல்வேறு சமூகத்தொடர்பு கருவிகளில் பல மணிநேரங்களைச் செலவிடும் இளையோர் மத்தியில், கத்தோலிக்க இளையோர் தகுந்த வழிகளில் நேரத்தைப் பங்கிட்டு செயலாற்றுவது பெரும் சவால் என்பதை திருத்தந்தை எடுத்துரைத்தார்.
வளாகத்தில் கூடியிருக்கும் இளையோர், வருங்காலத் திருஅவைக்கும், உலகத்திற்கும் தலைவர்களாகத் திகழ வேண்டியவர்கள் என்பதையும் திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.