2014-08-05 15:50:49

லிபியாவில் ஒரு கிறிஸ்தவர் இருந்தால்கூட அந்நாட்டிலே தங்கியிருப்பேன், டிரிபோலி அப்போஸ்தலிக்க நிர்வாகி


ஆக.05,2014. லிபியாவில் நடைபெற்று வரும் கடும் மோதல்கள் காரணமாக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும்வேளை, அந்நாட்டில் ஒரு கிறிஸ்தவர் இருந்தால்கூட அந்நாட்டிலே தான் தங்கியிருக்க முடிவுசெய்திருப்பதாக, தலைநகர் டிரிபோலி அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோசென்சோ மார்த்தினெல்லி கூறினார்.
லிபியாவில் கடாஃபி ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் அந்நாடு கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், டிரிபோலி விமானநிலையத்தையும், Cyrenaicaவையும் கைப்பற்றுவது தொடர்பாக பல்வேறு இஸ்லாம் தீவிரவாதக் குழுக்களுக்கிடையே கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் ஆயர் மார்த்தினெல்லி கூறினார்.
இந்நிலையில் லிபியாவில் கிறிஸ்தவச் சமூகத்தின் சூழல் குறித்து பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் விளக்கிய ஆயர் மார்த்தினெல்லி அவர்கள், Cyrenaicaவில் அருள்சகோதரிகள் எவரும் இல்லை, லிபியாவில் கத்தோலிக்க சமூகத்தின் இதயமாக இருந்த பிலிப்பைன்ஸ் மக்களில் பெரும்பாலானோர் அப்பகுதியைவிட்டு வெளியேறி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
டிரிப்போலியிலும் பிலிப்பைன்ஸ் மக்கள் பெருமளவாக இருந்தனர், அந்நகரிலிருந்தும் அவர்கள் தற்போது வெளியேறி வருகின்றனர் எனவும் ஆயர் மார்த்தினெல்லி கூறினார்.
மேலும், லிபியாவில் பணியாற்றி வரும் நலவாழ்வுப் பணியாளர்களுள் அறுபது விழுக்காட்டினர் பிலிப்பைன்ஸ் நாட்டவர். இருபது விழுக்காட்டினர் இந்தியர்கள். லிபியாவில் பணியாற்றிய இந்தியர்களுள் 47 தாதியர்கள் உட்பட 58 பேர் திரும்பியுள்ளனர்.
இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும்பட்சத்தில், லிபியாவின் மருத்துவமனைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குண்டு வீச்சுக்களால் காயமடைந்து ஏராளமானோர் மருத்துவமனைகளில் குவிந்து வரும் நிலையில், ஊழியர்கள் வெளியேறினால் அது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.