2014-08-05 15:50:55

சீனாவில் கத்தோலிக்கர் தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாகச் செயல்படுமாறு ஆயர் வலியுறுத்தல்


ஆக.05,2014. சீனாவில் சமய அடையாளங்கள் அழிக்கப்பட்டுவரும் நிலையில் தங்களின் உரிமைகளையும் மாண்பையும் பாதுகாப்பதில் உறுதியாகச் செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
சீனாவின் Wenzhou மறைமாவட்டத்தில் சான்ஜியாங் பிரிந்த கிறிஸ்தவ சபை ஆலயம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் உள்ளூர் அரசு அதிகாரிகளால் தகர்க்கப்பட்டது. அதற்குப் பின்னர் அந்நகரில் கிறிஸ்தவம் அழிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தனது Wenzhou மறைமாவட்ட கத்தோலிக்கருக்குத் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ள ஆயர் Vincent Zhu Weifang அவர்கள், கத்தோலிக்கர் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் துணிச்சலைக் காட்டுமாறு கேட்டுள்ளார்.
தற்போது அப்பகுதியில் சமய அடையாளங்கள் அழிக்கப்பட்டுவருவது அதிர்ச்சியைக் கொடுப்பதாகவும், அதற்கான காரணம் தெரியவில்லை எனவும் கூறியுள்ள ஆயர் Zhu அவர்கள், அரசின் இந்நடவடிக்கை விரைவில் நின்றுவிடும் என்று சிலர் கூறியதால் இதுவரை தான் பொறுமையுடன் இருந்ததாகவும், ஆனால் தற்போது நிலைமை மோசமாகி வருவதாகவும் கூறியுள்ளார்.
88 வயதாகும் ஆயர் Zhu அவர்கள், சீனாவில் இடம்பெற்ற கலாச்சாரப் புரட்சியின்போது 16 ஆண்டுகள் சீர்திருத்தத் தொழில் முகாமில் வேலை செய்தவர். பின்னர் 1982ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டுவரை சிறையில் இருந்தவர்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.