2014-08-05 15:50:29

ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட திருப்பலிப் பீட உதவியாளர்கள், திருத்தந்தை சந்திப்பு


ஆக.05,2014. ஜெர்மன் மொழி பேசும், பல்லாயிரக்கணக்கான திருப்பலிப் பீட வளர்இளம் பருவ உதவியாளர்களை இச்செவ்வாய் மாலை 6 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமையில் நான்கு நாள்கள் திருப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட இந்தப் பீட உதவியாளர்களுள் ஜெர்மனியிலிருந்து மட்டும் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் வந்துள்ளனர்.
“சரியான காரியத்தைச் செய்வதற்கு போதுமான சுதந்திரம்” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவர்களின் இத்திருப்பயணம் குறித்துப் பேசிய ஜெர்மன் ஆயர் பேரவையின் ஆயர் Karl-Heinz Wiesmann அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களின் இதயங்களைத் திறப்பார் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
கிறிஸ்துவில் நீங்கள் சுதந்திரமானவர்கள், சுதந்திரத்துடன் நல்ல காரியங்களை நீங்கள் செய்வதற்கு கிறிஸ்து சக்தி கொடுக்கிறார் என்று, இந்தத் திருப்பலிப் பீட உதவியாளர்களுக்குத் தாங்கள் சொல்ல விரும்புவதாகவும் ஆயர் கூறினார்.
உரோம் வந்துள்ள இந்தத் திருப்பலிப் பீட வளர் இளம் பருவ உதவியாளர்கள் ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.