2014-08-05 15:50:41

ஈராக் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தின் உறுதியான சான்றுகள், ப்ரெஞ்ச் ஆயர்கள்


ஆக.05,2014. தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ள நிலையிலும் ஈராக் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து மீது தாங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்துக்குச் சான்றாக உள்ளனர் என்று அந்நாட்டைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ள ப்ரெஞ்ச் ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஈராக்கின் Karakosh, Alqosh, Kirkuk, Erbil ஆகிய நகரங்களைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ள நான்கு ப்ரெஞ்ச் ஆயர்கள் வத்திக்கான் வானொலி அளித்த பேட்டியில், மோசுல் நகரைவிட்டு வெளியேறிய கிறிஸ்தவர்கள் எவரும் இஸ்லாம் தீவிரவாதிகளால் கொலைசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
ஒவ்வொரு நாளும் பல தடவைகள் ஈராக் கிறிஸ்தவர்களைச் சந்தித்துப் பேசிய ஆயர்களில் ஒருவரான Lyons பேராயர் கர்தினால் Philippe Barbarin அவர்கள், ஈராக் கிறிஸ்தவர்கள் நூற்றாண்டுகளாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
மோசுல் நகரிலிருந்து வெளியேறிய அகதிகளுக்கென ப்ரெஞ்ச் கத்தோலிக்கரிடமிருந்து சிறப்பு நிதியையும் சேகரித்து அங்கு வழங்கியுள்ளனர் ப்ரெஞ்ச் ஆயர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.