2014-08-04 15:28:55

வாரம் ஓர் அலசல் - கருணை பொங்கி வழிந்தோடட்டும்


ஆக.04,2014 RealAudioMP3 . அந்த ஊரில் வாழ்ந்த இருவர் ஒரே நாளில் இறந்தனர். இருவரும் இறைவனின் தீர்ப்புக்கு நிறுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் பெருஞ்செல்வந்தர். மற்றொருவர் அவருடைய பணியாள். அங்கு வந்த இறைவன், செல்வந்தரைப் பார்த்ததும், இவரை நரகத்துக்கு இழுத்துக்கொண்டு செல்லுங்கள் என்று ஆணையிட்டார். பின்னர் அந்தப் பணியாளரைப் பார்த்ததும், இவரை நமது சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னார். அப்போது செல்வந்தர் இறைவனிடம், நான் நிறையத் தானதர்மங்கள் செய்திருக்கிறேன், எனக்கு நரகமா, எனது வேலைக்காரனாகிய இவனுக்குச் சொர்க்கமா, இதிலென்ன நியாயம் என்று தனது வாதத்தை முன்வைத்தார். அதற்கு இறைவன், உனது பணியாள், தாகத்தால் தவித்துக்கொண்டிருந்த மாட்டுக்கு ஊர்க்குளத்திலிருந்து தண்ணீர் மொண்டு வந்தான். அதனால் அவனுக்குச் சொர்க்கம் என்றார். அதற்கு அந்தச் செல்வந்தர், ஊர்க்குளத்தை வெட்டியதே நான்தானே, எனக்கு நரகமா என்று கேட்டார். அப்போது இறைவன், உண்மைதான். ஆனால் அந்தக் குளத்தை வெட்டியது நீதான் என்று பெரிய கல்வெட்டையே அங்கு பதித்து வைத்தாய், நீ நிறைய தர்மங்கள் செய்ததாகச் சொல்கிறாய், ஆனால் நீ செய்ததெல்லாம் தர்மம் அல்ல, விளம்பரம். நீ எதைச் செய்தாலும் அங்கே உன் பெயரை எழுதி வைத்தாய். நீ தண்ணீர்ப் பந்தல் வைத்தாய், அது தாகத்தால் தவிப்பவர்களின் தாகம் தணிக்க அல்ல, ஆனால் ஊரில் உன் புகழ் பரவ வேண்டும் என்ற உன் தாகம் தணியவே அதனை வைத்தாய். ஏழைகளுக்கு உதவுவதற்காக நான் கொடுத்த செல்வத்தை, உன் பெயரைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தினாய். அதனால் உனக்கு நரகம். ஆனால் உன் ஊழியன் வாயில்லா ஜீவனுக்குக் கருணை காட்டினார், அதன் தாகத்தைத் தணித்தார். அந்தச் செயல் எனது தராசில் கனமானது. அதனால் அவருக்குச் சொர்க்கம். ஏனென்றால் நான் செயல்களைப் பார்ப்பதில்லை, எண்ணங்களைப் பார்க்கிறேன் என்று விளக்கம் அளித்தார் இறைவன்.
கருணை, இரக்கம், அன்பு, மன்னிப்பு, ஒப்புரவு, பகிர்வு போன்றவை, மனிதர்களை, மனிதர்களாக இனம்காட்டும் நற்பண்புகள். இவற்றைக் கொண்டே நாம் இறைவன் முன்னிலையில் வெகுமதியைப் பெறுகிறோம். சாதி, சமயச் சண்டைகளும், பயங்கரவாத வன்முறைகளும் உச்சத்தை எட்டியிருக்கும் இக்காலத்தில், ஏன் இந்நாள்களில்கூட இந்த வன்முறைகளுக்கு மத்தியில் கருணையும், இரக்கமும், சிலரிடம் பெருக்கெடுத்தோடுவதை பார்க்கவும், ஊடகங்கள் மூலம் அறியவும் முடிகின்றது. இத்திங்களன்று வெளியான தி இந்து தினத்தாளில் பாலஸ்தீனாவின் காசாவில் நடந்த ஒரு கருணைச் செயல் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
காசாப் பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் மீதும், அவர்களைச் சார்ந்தவர்கள் மீதும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கை என்றும் இஸ்ரேல் நியாயம் கற்பித்து வருகிறது. அவ்வப்போது “மனிதாபிமான போர்நிறுத்தம்” என்று, குறிப்பிட்ட மணிநேரத்தை அறிவித்து கண்ணாமூச்சி காட்டி வருகிறது இஸ்ரேல். இத்திங்களன்றுகூட 7 மணிநேரப் “மனிதாபிமான போர்நிறுத்தம்” அறிவிக்கப்பட்டது. கடந்த 28 நாள்களாக நடக்கும் நெஞ்சை உறைய வைக்கும் இந்தப் போரின் 24வது நாளில், மதியம் 2.30 மணியளவில் காசா நகரின் அல்-ஜல்லா தெருவில் வழக்கம்போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. திடீரென்று எங்கிருந்தோ வந்த இஸ்ரேலின் ஆளில்லா விமானம் குண்டுவீச, ஒரு வீட்டை மட்டும் குறிவைத்தது. அதேசமயத்தில், அந்தக் கட்டிடத்தில் வாழும் பஷிர் அல்-ராம்லாவியின் மகனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் வீட்டின்மீது குண்டு வீச்சு நடைபெறப் போகிறது, உடனடியாக வெளியேறுங்கள் என்று தெரிவித்தார். அப்போது ராம்லாவியின் உறவினர்கள் 35 பேர் அந்தக் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். தகவல் அறிந்ததும், ராம்லாவி மற்றும் உறவினர்கள் வீட்டிலிருந்து வெளியேறி உயிர் பிழைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்தச் சிறிய ரக குண்டு, வீட்டின்மீது விழுந்து புகையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து போர் விமானம் ஒன்று அங்கு வந்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வீசின. கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த பின்புதான் குண்டுவீச்சு நின்றது. அதுவரை சாலையோரங்களில் ஒதுங்கியிருந்த மக்கள், பின்னர் தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர். இது பற்றி ராம்லாவியின் மகன் கூறும்போது, “எங்களின் தொலைபேசி எண்ணுக்கு யார் அழைத்தார்கள் என்று தெரியவில்லை. இங்கு குண்டு வீசப்போவது பற்றி இஸ்ரேல் இராணுவத்துக்கு மட்டுமே தெரியும். அந்தத் தகவலை இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்தனர் என்றால், அவர்களுக்கு எனது தொலைபேசி எண் எவ்வாறு கிடைத்தது என்பது புரியாத புதிராக உள்ளது. அல்லது ஆளில்லா விமானம் வட்டமிட்டு வருவதைப் பார்த்து எனது வீட்டின் அருகில் வாழ்ந்தவர்கள் எனக்கு தொலைபேசியில் தெரிவித்தனரா என்றும் தெரியவில்லை. ஹமாஸ் இயக்கத்தினருடன் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எந்தவிதமான தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.
யாரோ ஒருவரின் கருணைச் செயல், ராம்லாவியின் குடும்பத்தினரின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. பிரிட்டன், கானடா போன்ற நாடுகள், முதல் உலகப் போரில் தாங்கள் இணைந்ததன் நூறாம் ஆண்டு நினைவை ஆகஸ்ட் 4, இத்திங்களன்று கடைப்பிடித்தன. 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி உள்ளூர் நேரம் இரவு 11 மணிக்கு பிரிட்டன் போரைத் தொடங்கியது. 1918ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதிவரை நடந்த இந்த முதல் உலகப் போரில், பிரித்தானிய இராணுவத்துக்காகப் போரிட்டு ஏறக்குறைய ஒன்பது இலட்சம் பேர் உயிரிழந்தனர். 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி, ஜெர்மனி, பிரான்ஸ்மீது போரை அறிவித்ததன் நூறாம் ஆண்டு நினைவை, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அரசுத்தலைவர்கள் இணைந்து இஞ்ஞாயிறன்று கடைப்பிடித்தனர். பழைய பகைமைக் காயங்கள் மறைந்து புதிய நட்புகள் மலர்ந்திருப்பதன் அடையாளமாக இது தெரிகின்றது.
உலகில் கருணையும், அன்பும் இன்னும் இறந்துவிடவில்லை என்பதற்கு இப்படி பல நிகழ்வுகள் சாட்சி சொல்கின்றன. திண்டுக்கல் அருகேயுள்ள பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த விண்ணரசி என்ற 15 வயது மாணவி, 10ம் வகுப்பு படித்துவருகிறார். இந்த மாணவி, குடும்ப நிலைமை காரணமாக, புத்தகப் பையுடன், வீதிவீதியாகச் சென்று காய்கறியும் கீரையும் விற்றுத் தனது அக்காவையும் தங்கையையும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நான்கு பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் விண்ணரசி மூன்றாவது குழந்தை. அப்பா பிறவியிலேயே வாய் பேச முடியாதவர். வீதிவீதியாகச் சென்று காய்கறி விற்றுவந்த தாய் செல்வராணியால் முன்புபோல் வியாபாரத்தையும் வீட்டையும் ஒருசேரக் கவனிக்க முடியவில்லை. அதனால் முதல் இரு பிள்ளைகளின் படிப்பு தடைபட்டது. மூன்றாவது மகள் விண்ணரசியும் படிப்பைக் கைவிடும் நிலைக்கு உள்ளானார். இதை விரும்பாத விண்ணரசி, திண்டுக்கல் சந்தைக்குத் தினசரிக் காலை 5 மணிக்குச் சென்று அம்மா செல்வராணி வாங்கிவரும் காய்கறி, கீரை வகைகளைச் சைக்கிளில் வைத்து அந்தச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று விற்று வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, குடும்பச் சுமைகளைத் தாங்க பெற்றோருக்கு உதவியாக இருப்பதுடன் பள்ளிப் படிப்பையும் அவர் கைவிட வில்லை. தனது அக்காவும், தங்கையும் படிப்பதற்கும் உதவி வருகிறார். மேலும், திருச்சி அரசு பொதுமருத்துவமனை எதிரே உள்ள சிறிய தெருவில், தினமும் காலையில் 300 நோயாளிகளுக்கு கஞ்சி, மதியம் சுடச்சுட 300 முதல் 400 பேருக்கு உணவு என 22 ஆண்டுகளாக தொடர்ந்து தொய்வின்றி வழங்கி வருகின்றனர் ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை அன்பர்கள். இது பற்றிக் கூறிய இந்த அறக்கட்டளை நிர்வாகி ரவீந்திரகுமாரி அவர்கள்...
“இருபது ஆண்டுகளுக்குமுன் நோயாளிகளுக்குக் கொடுக்க சூடான தண்ணீருக்காக, நோயாளிகளின் உறவினர்கள் டீக்கடைகளைத் தேடி அலைவர். இதைப் பார்த்த என் தந்தை கோவிந்தராஜ், மருத்துவமனை எதிரே இருக்கும் தெருவில் சூடான தண்ணீரை தினந்தோறும் இலவசமாக வழங்கி வந்தார். அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது. நோயாளிகளுக்கு, எளிதில் செரிக்கும் உணவாக மருத்துவர் பரிந்துரைக்கும் கஞ்சி மட்டும் மருத்துவமனையைச் சுற்றி எந்தக் கடையிலும் கிடைக்கவில்லை என்று. அதையடுத்து சில அன்பர்கள் உதவியுடன் தினமும் காலை 6 மணிக்கு இஞ்சி, பூண்டு கலந்த அரிசிக் கஞ்சி வழங்க ஆரம்பித்தார். அன்பர்கள் பலரின் ஆதரவு கிடைக்கவே மதிய உணவும் வழங்க ஆரம்பித்து விட்டார். அன்று அவர் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது. ஒரு மனிதரின் பசியை மட்டும் போக்கி விட்டால் அவருக்கு அடுத்து தவறான சிந்தனை ஏதும் தோன்றாது என்பது என் கருத்து".
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஞாயிறு மூவேளை செப உரையில் வலியுறுத்திய மூன்று கருத்துக்களில் கருணையும் ஒன்று. "நமது தேவைகள் நியாயமானதாக இருந்தாலும், அவை ஏழைகளின் தேவைகளுக்கு முன்னர் ஒருபோதும் அவ்வளவு அவசரமானதாக இருக்காது. ஏழைகளைப் பார்ப்பதை நாம் எத்தனை தடவைகள் தவிர்த்து நடந்திருக்கிறோம்? இது தன்னலம். நாம் ஏழைகள் பற்றிப் பேசுகிறோம். ஆனால் இந்த ஆண், இந்தப் பெண் தங்களின் பிள்ளைகளை உடுத்துவதற்கும், அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்கும் வசதியில்லை என்ற எதார்த்தத்தை உண்மையிலே உணருகிறோமா?" என்பன போன்ற கேள்விகளை எழுப்பினா RealAudioMP3 ர். ஆம். அன்பர்களே, வள்ளலார் அவர்கள் அறிவுறுத்தியது போன்று, அடுத்தவர் துன்பத்தை காணச் சகிக்காமல் மனம் வருந்துபவரே கருணைமிக்கவர்கள். எனவே கருணை நிறைந்தவர்களாக இருப்போம். அது நம் உள்ளங்களில் ஊற்றாய்ப் பொங்கி வழிந்தோடட்டும். தங்களை வளர்க்க எண்ணி, உயிர்களைத் துன்புறுத்திக் கொலை செய்யும் கொடியவர்கள் ஒருபோதும் இறைவனுக்கு உறவாக மாட்டார்கள். எவ்வுயிரையும் தன் உயிராக மதித்து அன்பு காட்டுபவர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.