2014-08-04 16:30:59

ஆஸ்திரேலிய கர்தினால் மறைவு. திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


ஆக.04,2014. ஆஸ்திரேலிய கர்தினால் Edward Bede Clancy அவர்கள் இறைவனடி சேர்ந்ததையொட்டி, தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தியை சிட்னி உயர் மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
90 வயதான கர்தினால் Clancy அவர்கள், இஞ்ஞாயிறன்று இறைபதம் அடைந்ததையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், ஏழைகளின் தேவைகள் குறித்து கர்தினால் அவர்கள் கொண்டிருந்த அக்கறை, கத்தோலிக்கக் கல்விக்கு அவர் வழங்கிய ஆதரவு, கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்த அவரின் கண்ணோட்டம் போன்றவற்றிற்கு தன் பாராட்டுதல்களை வெளியிட்டுள்ளதோடு, சிட்னி உயர் மறைமாவட்ட மக்களுக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
சிட்னியின் பேராயராகப் பணியாற்றி 1988ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டு, 2001ல் பணி ஓய்வுபெற்ற கர்தினால் Clancy அவர்களின் மரணத்துடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 211ஆகக் குறைந்துள்ளது, இதில் 118 பேர் 80 வயதிற்குட்பட்டவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.