2014-08-02 15:16:11

முதல் உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டு, கானடா ஆயர்களின் அறிக்கை


ஆக.02,2014. முதல் உலகப்போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டை இவ்வுலகம் நினைவுகூரும் இந்நாள்களில், நீதி மற்றும் அமைதிக்குச் செயல்துடிப்புள்ள சாட்சிகளாக வாழ்வதற்கு நமது அர்ப்பணத்தைப் புதுப்பிப்போம் என, கானடா நாட்டு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.
முதல் உலகப்போரில் கானடா இணைந்ததன் நூறாம் ஆண்டு நினைவு ஆகஸ்ட் 4, வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படவிருப்பதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Paul-André Durocher அவர்கள், போரின் கொடுமைகள் ஒருபோதும் புகழப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெல்ஜியத்தின் நடுநிலைமையை மீறி, ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்ரமித்ததைத் தொடர்ந்து, 1914ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிரிட்டன் ஜெர்மனிக்கெதிராகப் போரை அறிவித்தது. அச்சமயத்தில் பிரித்தானியப் பேரரசின் ஓர் அங்கமாக இருந்த கானடாவும் பிரிட்டனுடன் சேர்ந்து முதல் உலகப்போரில் இணைந்தது.
கானடா போரிடத் தொடங்கியதன் இரண்டு மாதங்களுக்குள்ளேயே காணப்பட்ட போரின் கொடூரங்கள் பற்றி அப்போதைய கானடா ஆயர்கள் எழுதிய அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள பேராயர் Durocher அவர்கள், கிறிஸ்தவர்கள் அமைதிக்கான தங்கள் அர்ப்பணத்தைப் புதுப்பிக்குமாறு கேட்டுள்ளார்.
1914ம் ஆண்டு ஜூலை 28 முதல் 1918ம் ஆண்டு நவம்பர் 11வரை நான்காண்டுகள் நடந்த முதல் உலகப்போரில், ஏறக்குறைய 90 இலட்சம் இராணுவத்தினரும், 70 இலட்சம் அப்பாவி மக்களும் இறந்தனர்.

ஆதாரம் : Zenit







All the contents on this site are copyrighted ©.