2014-08-02 15:16:44

மியான்மாரில் சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளது ஐ.நா. நிறுவனம்


ஆக.02,2014. மியான்மார் நாட்டின் ஆயுதப் படையிலிருந்து சிறார் படைவீரர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அதேவேளை, அவர்கள் கல்வி வாய்ப்பைப் பெறவும், ஆயுதங்களிலிருந்து அவர்கள் விலகி இருக்கவும் அரசு முயற்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளது ஐ.நா. நிறுவனம்.
Tatmadaw என்றழைக்கப்படும் மியான்மார் ஆயுதப் படையிலிருந்து 91 சிறார் படைவீரர்கள் இவ்வாரத்தில் விடுதலைசெய்யப்பட்டு தங்கள் குடும்பங்களைச் சந்தித்துள்ளனர். இச்சிறாரில் பலர் பல ஆண்டுகள் தங்கள் குடும்பங்களைவிட்டுப் பிரிந்திருந்தனர்.
மியான்மார் அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றுப் பேசியுள்ள, ஐ.நா. சிறார் நிதி நிறுவனமான யூனிசெப்பின் உதவிப் பிரதிநிதி ஷாலினி பகுகுணா, 18 வயதுக்குட்பட்ட சிறார், படைப்பிரிவில் சேர்க்கப்படக்கூடாது என்ற விதிமுறை பின்பற்றப்பட்டு, Tatmadaw அமைப்பிலிருந்து அனைத்துச் சிறார் படைவீரர்களும் நீக்கப்படுமாறு கேட்டுள்ளார்.
2016ம் ஆண்டுக்குள், அரசு பாதுகாப்புப் படைகள், சிறாரைப் படைப்பிரிவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், “சிறார், படை வீரர்கள் அல்ல” என்ற தலைப்பில் கடந்த மார்ச் மாதத்தில் யூனிசெப் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.