2014-08-02 15:20:39

பொதுக்காலம் 18ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசா, ஒரு நாள், ஒரு பையில் அரிசி எடுத்துக்கொண்டு, ஓர் ஏழைப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றார். அப்பெண்ணும் அவரது குழந்தைகளும் பல நாட்களாக பட்டினியால் துன்புற்றனர் என்பதை அன்னை அறிந்ததால், அவரைத் தேடிச் சென்றார். அன்னை கொண்டுவந்த அரிசியை நன்றியோடு பெற்ற அப்பெண், அடுத்து செய்தது அன்னையை வியப்பில் ஆழ்த்தியது. தான் பெற்ற அரிசியை அப்பெண் இரு பங்காகப் பிரித்தார். ஒரு பங்கை, தன் வீட்டுக்கு அருகில் வாழ்ந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். அன்னை அவரிடம் காரணம் கேட்டபோது, அப்பெண், "அன்னையே, நீங்கள் தந்த அரிசியில் பாதிப் பங்கைக் கொண்டு எங்களால் சமாளிக்க முடியும். ஆனால், அடுத்த வீட்டிலோ அதிகக் குழந்தைகள் உள்ளனர். அவர்களும் பல நாட்கள் பட்டினியால் துடிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும்" என்று பதில் சொன்னார்.
அன்னை தெரேசா மட்டுமல்ல, அவரது பரிவால் தொடப்பட்ட பல்லாயிரம் வறியோரும் நற்செய்தியை வாழ்வாக்கியுள்ளனர். இந்த நல்ல உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறி, இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்குகிறோம். இவ்வுலகில் பெருமளவு பெருகிவரும் சுயநலம், பேராசை ஆகிய நோய்களுக்கு மாற்று மருந்தான பகிர்வைக் குறித்து சிந்திப்பதற்கு இன்றைய வழிபாட்டு வாசகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

மக்களின் பசியைப் போக்க, இறைவன் விடுக்கும் அழைப்பு இறைவாக்கினர் எசாயா நூலில் இவ்வாறு ஒலிக்கிறது:
இறைவாக்கினர் எசாயா 55: 1-3
இறைவன் கூறுவதாவது: தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்: கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்: நல்லுணவை உண்ணுங்கள்: கொழுத்ததை உண்டு மகிழுங்கள். எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்: கேளுங்கள்: அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்: தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.

மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா என்ற கேள்வி நற்செய்தியில் எழுப்பப்படுகிறது. இருந்தாலும், இறைவனை நம்பி, உணவு பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள் வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது.
இவ்விரு விவிலியப் பகுதிகளையும் மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, ஓர் எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. அதாவது, உலகின் பசியைப் போக்க, இல்லாதவர்களின் குறையைப் போக்க இறைவன் நேரில் வந்து ஏதாவது புதுமைகள் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், இந்த இரு வாசகங்களையும் இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், ஓர் உண்மை தெளிவாகும். இறைவன் ஒன்றுமில்லாமையிலிருந்து உணவை உருவாக்கி, பலுகிப் பெருகச் செய்யவில்லை. மனிதர்களின் ஒத்துழைப்பை இறைவன் நாடுகிறார் என்ற உண்மையை உணர முடியும்.
தானியங்களையும், பழங்களையும் இயற்கை வழியே இறைவன் தந்தாலும், அவற்றை உணவாக, பானமாக மாற்றி உண்பதற்கு மனித உழைப்பு தேவை. வறியோரின் கடின உழைப்பால் உருவான உணவை, அவர்களுக்கே கிடைக்காதவண்ணம், பணத்திற்காக பதுக்கி வைப்பது குறித்து முதல் வாசகத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. உருவாக்கிய உணவை, தனக்கு மட்டும் என்று ஒளித்துவைக்காமல் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால், உலகின் பசியைப் போக்க முடியும் என்பதை இரு வாசகங்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன.

தனிமையான ஓரிடத்திற்குச் சென்ற தன்னைத் தொடர்ந்துவந்த மக்கள்மீது இயேசு பரிவு கொண்டார் என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் பரிவுதான் புதுமையைத் துவக்கிவைத்தது.
அடுத்து, தங்களிடம் உள்ள உணவு இவ்வளவுதான் என்று சீடர்கள் கூறியது புதுமையின் அடுத்தக் கட்டம். உணவைப் பணமாக மாற்றும் பேராசையினால், உணவை மறைக்கும் சுயநலத்தால் உலகில் உள்ள உணவின் உண்மை நிலை தெரியாமல் போகிறது; பசியும், பட்டினியும் தாண்டவமாடுகிறது. உண்மையைக் கூறமுடியாமல் நம்மைத் தடுக்கும் பேராசையும், சுயநலமும் நீங்கினால், அனைவருக்கும் உணவு கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்பதை சீடர்கள் கூறிய உண்மையும், அதைத் தொடர்ந்த புதுமையும் சொல்லித் தருகின்றன.
உணவைப் பொருத்தவரை, இன்றைய உலகின் உண்மை நிலை இதுதான்:
ஐ.நா. வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, ஒவ்வொரு நாளும் 3.6 நொடிக்கு ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இதில் என்ன கொடுமை என்றால், இந்த மரணங்கள் தேவையற்றவை. உலகத்தின் இன்றைய மக்கள் தொகை 710 கோடி. 740 கோடி மக்கள் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உலகில் தினமும் உற்பத்தியாகிறது. இருந்தாலும், 130 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். கணக்கிட்டுப் பார்த்தால், 170 கோடி மக்களுக்குப் போய் சேரவேண்டிய உணவு, ஒவ்வொரு நாளும் வீணாகக் குப்பையில் எறியப்படுகிறது. இது வேதனை தரும் உண்மை. இந்த நிலையால், ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
இந்தத் தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்கவேண்டும்.

இயேசு மக்களுக்கு உணவைப் பகிர்ந்தளித்த புதுமைக்கு முன்னதாக, மத்தேயு மாற்கு ஆகிய இரு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள மற்றொரு விருந்து இன்றைய உலகின் நிலையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் அமைந்துள்ளது. மன்னன் ஏரோதின் அரண்மனையில் நடந்த அந்த விருந்தில் மதுவும், உணவும் அளவு கடந்து சென்றன. இதன் விளைவாக, மன்னனும் மற்றவர்களும் மதியிழந்து, திருமுழுக்கு யோவானைக் கொலை செய்தனர். இந்த விருந்தைப்பற்றி கூறிய அதே மூச்சில் இயேசு தந்த அந்தப் பாலைவன விருந்தையும் மத்தேயு, மாற்கு இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

5000க்கும் அதிகமான மக்களுக்கு இயேசுவும், சீடர்களும் உணவளித்த இந்தப் புதுமை, நான்கு நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது ஒரு கண்ணோட்டம். மற்றொரு கண்ணோட்டம் - சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க நமக்கு உதவியாக இருப்பது, யோவான் நற்செய்தியில் நாம் காணும் ஒரு குறிப்பு.
ஐந்து அப்பங்களும், இரண்டும் மீன்களும் அங்கிருந்தன என்பதை நான்கு நற்செய்திகளும் கூறினாலும், யோவான் நற்செய்தியில் மட்டும், அந்த உணவு, ஒரு சிறுவனிடம் இருந்தது என்று குறிப்பாகச் சொல்கிறது. சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்? என்ற கேள்வியை எழுப்பினால், பல எண்ணங்கள் பதிலாகக் கிடைக்கின்றன. பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று சிறுவர், சிறுமிகள் எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவைத் தயாரித்து, எடுத்துச்செல்வது... பெற்றோரே. யூதர்கள் மத்தியில் இத்தகைய முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?
பல தலைமுறைகளாய், யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச் செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. தாங்கள் செல்வது எவ்விடம் என்பதை சரியாக அறியாததால், குடும்பத்தலைவி முன்மதியோடு செயல்பட்டார். குடும்பமாய்ச் சென்ற தங்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

மாலை ஆனதும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. அங்கிருந்த பல யூதர்களிடம் உணவுப் பொட்டலங்கள் இருந்தன. ஆனால், யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலை நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் படிப்பினைகளில் பகிர்வைப் பற்றி பேசினார்… சரிதான். ஆனால் எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? நமக்கெனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால் நாம் என்ன செய்வது? இந்தக் கேள்விகளில் பெரியவர்களும், இயேசுவின் சீடர்களும் முழ்கியிருந்தார்கள். மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடுவது நல்லது என்று சீடர்கள் சிந்தித்தனர். நல்லவேளை, குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள், பெரியவர்களின் எண்ண ஓட்டங்களைப் போல் இல்லாததால், அந்தப் புதுமை நிகழ வாய்ப்பு உருவானது.
மக்களுக்கு உணவளிப்பது பற்றி இயேசு சீடர்களிடம் பேசுவதைக் கேட்ட ஒரு சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். பின்விளைவுகளைச் சிறிதும் கணக்கு பார்க்காமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன் அச்சிறுவன் இயேசுவிடம் வந்து, தன்னிடம் உள்ளதையெல்லாம் பெருமையுடன் தந்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் குழந்தையின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும் தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பமானது ஓர் அற்புத விருந்து.
ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த பகிர்வின் மகிழ்விலேயே அங்கிருந்தவர்களுக்கு பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் உண்டதுபோக மீதியை 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக இன்றைய நற்செய்தி கூறுகிறது. இயேசு அன்று நிகழ்த்தியது ஒரு பகிர்வின் புதுமை. இது இரண்டாவது கண்ணோட்டம்.
தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச்செய்தார் என்பது புதுமைதான். ஆனால், தன் அற்புதச் சக்தி கொண்டு அப்பங்களைப் பலுகச் செய்ததைவிட, தன் படிப்பினைகளால் மக்கள் மனதை மாற்றி, இயேசு, அவர்களைப் பகிரச்செய்தார் என்பதை நான் மாபெரும் ஒரு புதுமையாகப் பார்க்கிறேன்.

வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான் இவ்வுலகின் பசியைப் போக்க முடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான் இந்தக் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான் இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, அச்சிறுவனைப் போல் நம்மில் யாரும் பகிர்வு என்ற புதுமையை ஆரம்பித்து வைக்கலாம்.

பல ஆண்டுகளுக்கு முன், ஆப்ரிக்காவில், கடினமானச் சூழலில், வறுமைப்பட்ட மக்களுக்குப் பணியாற்றிவந்த மருத்துவர் Albert Scheweitzer அவர்களைப் பற்றி 13 வயது நிறைந்த ஒரு சிறுவன் கேள்விப்பட்டான். அவருக்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்ய எண்ணியச் சிறுவன், தன்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு, 'ஆஸ்பிரின்' மாத்திரைகள் வாங்கினான். தான் வாங்கிவைத்திருக்கும் மாத்திரைகளை, மருத்துவர் Scheweitzer அவர்களிடம் எடுத்துச் செல்ல முடியுமா? என்று கேட்டு, அமெரிக்க விமானப் படைத் தளபதிக்கு மடல் ஒன்றை அனுப்பினான் அச்சிறுவன்.
அச்சிறுவன் அனுப்பிய மடலைப் பற்றி அத்தளபதி ஒரு நாள் வானொலியில் பேசினார். இதைக் கேட்ட பலர், மருத்துவர் Scheweitzer அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தனர். உதவிகள் வந்து குவிந்தன. சில நாட்கள் சென்று, அச்சிறுவன், 4 1/2 டன் எடையுள்ள மருந்துகளையும், 40,000 டாலர்களையும் எடுத்துக் கொண்டு, மருத்துவர் Scheweitzer அவர்களைக் காண விமானத்தில் பறந்தான். இதைப் பற்றி கேள்விப்பட்ட மருத்துவர் Scheweitzer அவர்கள், "ஒரு சிறுவனால் இவ்வளவு சாதிக்கமுடியும் என்பதை என்னால் சிறிதும் எண்ணிப் பார்க்க முடியவில்லை" என்று கூறினார்.
மனம் இருந்தால், அந்த மனதில் பரிவிருந்தால், பகிரவேண்டும் என்ற கனவிருந்தால், மலைகளாக உயர்ந்து நிற்கும் தடைகளும், தலைவணங்கி வழிவிடும்.

இறுதியாக அன்புள்ளங்களே, கடந்த திங்கள், ஜூலை 28, முதல் உலகப் போர் துவங்கியதன் நூற்றாண்டு நாள், உலக வரலாற்றில் இரத்தம் தோய்ந்த ஒரு நாள் என்று கூறினோம். அதேபோல், இந்த வாரம், ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய நாட்கள் நம்மை வேதனையில் ஆழ்த்தும் வரலாற்று நாட்கள். ஆம், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9ம் தேதி, நாகசாகியிலும் அணுகுண்டுகள் வீசப்பட்ட நாட்கள்.
முதல் உலகப் போர் துவங்கி 100 ஆண்டுகள் சென்றபின்னரும், இரண்டாம் உலகப் போர் முடிந்து 70 ஆண்டுகள் சென்ற பின்னரும் மனிதக்குலம் இன்னும் முழுமையான மனிதத்துவம் பெறாமல் உள்ளது என்பது வேதனையான உண்மை.

தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் உலகத்தை அழிப்போம் என்று கோபத்தில் அன்று சொன்னார் பாரதி. உலகத்தை அழிப்பது எளிது. இல்லாதோர், போராட்டங்களை மேற்கொண்டு, இருப்போரின் உலகை அழிக்கமுடியும். அந்த அழிவைத் தடுக்க, இருப்பவர்கள் ஆயுதங்களை நம்பி வாழ வேண்டியிருக்கும். இருப்பவர்கள் பக்கமே பெரும்பாலும் சாயும் உலக அரசுகள், ஆயுதங்கள் வாங்க செலவிடும் தொகையில் ஆயிரத்தில் ஒருபங்கை மக்களின் தேவைகளுக்காகச் செலவிட்டால், ஆயுதங்களே தேவையில்லாமல் போகும் என்பது கசப்பான ஓர் உண்மை. இருப்பவர்கள் இல்லாதவர்களிடமிருந்து தங்கள் உலகைக் காப்பதற்குப் பதில், இல்லாதவர்களோடு இந்த உலக வளங்களை பகிர்ந்து கொண்டால், அனைவருமே நலமாக, மகிழ்வாக வாழமுடியுமே! பகிர்வுப் பாடங்களை, பச்சிளம் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள பணிவான மனதை இறைவன் நமக்குத் தரவேண்டுமென்று மன்றாடுவோம்.

கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வளர்ந்துவரும் பேராசையால் இயற்கை வளங்களை தேவையின்றி அழித்து வரும் இன்றைய போக்கிற்கு ஒரு மாற்றாக, இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் பாடம் ஒன்றைப் பயில முயல்வோம். பயன்படுத்தியது போக, மீதியைப் பாதுகாப்பதும் நமது கடமை என்று இயேசு ஆற்றியப் புதுமையின் இறுதியில் சொல்லித் தருகிறார்.
மத்தேயு நற்செய்தி 14: 20
அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

தூக்கியெறியும் கலாச்சாரத்தில் ஊறிப்போயிருக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு அவ்வப்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவரும் அறிவுரையும் இதுதான். பேராசையால் தேவைக்கும் அதிகமாகத் திரட்டி, பின்னர் அவற்றை வீணாக்காமல், தூக்கியெறியாமல், பாதுகாக்கும் பண்பை, பகிர்ந்துகொள்ளும் மனதை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று இந்த ஞாயிறு வழிபாடு நமக்குச் சவால் விடுக்கிறது. நமது பதில் என்ன?








All the contents on this site are copyrighted ©.