2014-08-02 15:16:05

புனித பூமியின் அமைதிக்காக காசாவிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் நோன்புகள், செபங்கள்


ஆக.02,2014. புனித பூமியில் அமைதி நிலவுவதற்காக காசாவிலும், மத்திய கிழக்கு முழுவதிலும் நோன்புகளும் செபங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இயேசு உருமாறிய விழாவான இம்மாதம் 6ம் தேதியன்று உலகினர் அனைவரும் இக்கருத்துக்காகச் செபிக்குமாறு Aid to the Church in Need பிறரன்பு அமைப்பு கேட்டுள்ளது. இதே நாளில் ஈராக்கிலுள்ள கிறிஸ்தவர்களும் செபிக்குமாறு கேட்டுள்ளார் ஈராக் முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ.
மேலும், எகிப்திலுள்ள கத்தோலிக்கர்கள் நோன்புடன் செபங்களை ஏற்கனவே தொடங்கியுள்ளனர். காசாவில் அமைதி நிலவுவதற்காக இடம்பெறும் இச்செப தப முயற்சிகள் இம்மாதம் 15ம் தேதி அன்னைமரியாவின் விண்ணேற்பு விழா வரை நடக்கும்.
மேலும், எகிப்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்கள் அழைப்பின்பேரில், அச்சபை கிறிஸ்தவர்களும் இம்மாதம் 7 முதல் 22 வரை 15 நாள் நோன்பு கடைப்பிடிக்கின்றனர்.
பெய்ட் கனினாவிலுள்ள புனித ஜேம்ஸ் ஆலயத்தில் எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷோமாலி அவர்கள் இவ்வெள்ளி மாலை போர் முடிவுக்கு வரச் செபித்து திருப்பலி நிகழ்த்தினார்.
இன்னும், பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்கள், காசாவில் இடம்பெறும் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு, போர் நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.