2014-08-02 15:16:39

இபோலா நோய்ப் பரவல் அச்சுறுத்தல், உலக நலவாழ்வு நிறுவனம்


ஆக.02,2014. மேற்கு ஆப்ரிக்காவில் இபோலா நோய் மிக வேகமாகப் பரவிவருகிறது என்றும், அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் மெதுவாகச் செல்கின்றன என்றும் உலக நலவாழ்வு நிறுவன இயக்குனர் Margaret Chan கூறியுள்ளார்.
இந்நோயினால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள கினி, லைபீரியா, சியெரா லியோன் ஆகிய நாடுகளின் தலைவர்களை, கினி நாட்டின் கோனாக்ரியில் சந்தித்த பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார் Margaret Chan.
வரலாற்றில் இபோலா நோய் இதற்குமுன் இவ்வளவு பெரிய அளவில் பரவியது இல்லை என்றும், இந்நிலை நீடித்தால் மிக மோசமான பாதிப்புகள் உருவாகும் என்றும் எச்சரித்த மருத்துவரான Chan, இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பத்து கோடி டாலர் திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளார்.
சாதாரணமாக பழந்தின்னி வவ்வால்களிடம் காணப்படுகின்ற இபோலா கிருமி அவ்வப்போது மனிதர்களிடத்தில் பரவுவதுண்டு. இரத்தம், வியர்வை போன்ற உடல் திரவங்கள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்கள் புழங்கிய இடங்கள் மற்றும் பொருட்கள் வழியாகவும் இக்கிருமி பரவுகிறது.
இக்கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள்தான் ஏற்படும். பின்னர் கண்கள், பற்களைச் சுற்றியுள்ள ஈறுகளிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படும். அடுத்த கட்டமாக உடலுக்குள்ளேயே இரத்தக்கசிவு ஏற்பட்டு, உடல் உறுப்புகள் செயலிழக்கும். இந்நோய்க் கிருமித் தொற்றியவருக்கு உடலில் பாதிப்பு தோன்ற இரண்டு முதல் 21 நாட்கள் வரை ஆகலாம்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.