2014-08-02 15:16:18

இந்திய சமூகம் அறநெறி விழுமியங்களை இழந்து வருவதே, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம், தலத்திருஅவை அதிகாரி


ஆக.02,2014. இந்திய சமுதாயத்தில் அறநெறி மற்றும் ஆன்மீக விழுமியங்கள் குறைந்து வருவதே, நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணம் என்று, இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் CNS கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்திய சமுதாயத்தின் முக்கிய விழுமியங்கள் சீரழிந்து வருகின்றன என்றும், ஊடகங்களால் தூண்டப்படும் ஆசைகளால் ஏற்படும் மகிழ்ச்சி, பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது என்றும் ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசா கூறினார்.
பாலியல் வன்கொடுமைகளுக்கு இளம் சிறுமிகளும், ஏன் நவதுறவியரும்கூட ஆளாகின்றனர் என்றுரைத்த பேராயர் ஆல்பர்ட் டி சூசா அவர்கள், இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் வேகமாக அதிகரித்து வருவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் குறை கூறினார்.
இன்டர்னெட் மூலம் கிடைக்கும் இழிபொருள் படங்களும், இலக்கியங்களும் இதற்கு ஒரு காரணம் என்றுரைத்த பேராயர், குற்றவாளிகளின் அச்சுறுத்தலால் பல பாலியல் வன்செயல்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுவதையும் குறிப்பிட்டார்.
புதுடெல்லியை மையமாகக் கொண்ட காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வின்படி, இந்தியாவில் கடந்த 13 ஆண்டுகளாக, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 2 பாலியல் வன்செயல்கள் நடந்து வருவதாகத் தெரிகிறது.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.