2014-08-01 15:53:40

புனிதபூமியில் அமைதியின் பாதையைத் தேர்ந்துகொள்வதற்கு நிரந்தரப் போர்நிறுத்தம் அவசியம், கர்தினால் மரதியாகா


ஆக.01,2014. காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய ஹமாஸ் புரட்சியாளர்களுக்கும் இடையே நடந்துவரும் மோதல்கள் நிரந்தரமாக நிறுத்தப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் Oscar Rodriguez Maradiaga.
காசா நெருக்கடி குறித்து இவ்வியாழனன்று செய்தி வெளியிட்ட கர்தினால் Maradiaga அவர்கள், புனிதபூமியில் அமைதியின் பாதையைத் தேர்ந்துகொள்வதற்கு நிரந்தரப் போர்நிறுத்தம் இன்றியமையாதது என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை தொடக்கத்திலிருந்து நடந்துவரும் இச்சண்டையில், காசாவிலுள்ள ஏறத்தாழ இருபது இலட்சம் பேரும், இஸ்ரேல் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றுரைக்கும் கர்தினாலின் செய்தி, காசாவில், மக்கள் நெருக்கம் மிகுந்த குறுகிய பகுதியில் இஸ்ரேலின் குண்டுமழை பொழியும்போது, ஒளிந்துகொள்வதற்கு மக்களுக்குப் பாதுகாப்பான இடம் இல்லை என்றும் தெரிவிக்கிறது.
காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களால் மருத்துவமனைகள் நிறைந்துள்ளன, பள்ளிகள் குண்டுகளால் தாக்கப்படுகின்றன என்றுரைத்துள்ள கர்தினால், இஸ்ரேலும், ஹமாசும் ஆயுதங்களைக் கைவிட்டு, பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை நோக்குமாறு கேட்டுள்ளார்.
மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நீதியுடன்கூடிய அமைதியின் பாதையைத் தேர்ந்துகொள்வதற்கு நிரந்தரப் போர்நிறுத்தம் இன்றியமையாதது என்றும் அனைத்துலக காரித்தாஸ் நிறுவனத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.