2014-08-01 15:54:14

ஆகஸ்ட் 1 - நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நாள்


ஆக.01,2014. ஆகஸ்ட்01, இவ்வெள்ளியன்று நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி கருத்து தெரிவித்த மருத்துவர்கள், இந்தியாவில் நான்காவது இடத்திலிருந்த நுரையீரல் புற்றுநோய், தற்போது முதல் இடத்துக்கு வந்திருக்கிறது எனக் கூறியுள்ளனர்.
பங்களூரு, செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் நுரையீரல் மருத்துவத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் மருத்துவர் உமா தேவராஜ் அவர்கள் இந்நோய் பற்றிக் கூறியபோது, நுரையீரல் புற்றுநோயாளிகளுள் 85 விழுக்காட்டினருக்கு புகைப்பிடிப்பதனால் மட்டுமே இந்நோய் வருகிறது என்று தெரிவித்தார்.
புகைப்பழக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்றுரைத்த மருத்துவர் உமா அவர்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடுகளிலும், பணியிடங்களிலும் வாழ்வதாலும், கதிர்வீச்சுத் தாக்குதலாலும் இந்நோய் வருகிறது என்று கூறினார்.
நெசவு, பஞ்சு பொதி மெத்தைகள் தயாரிக்கும் தொழிலில் இருப்பவர்களும், பீடி சுற்றும் தொழிலில் இருப்பவர்களும்கூட நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.
மேலும், வெளிப்புற காற்று மாசு காரணமாக 2 விழுக்காட்டினர் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். வீட்டின் உள்ளே சமையல் அறையில் கரியைக் கொண்டு பற்றவைக்கும் அடுப்பு, சாண வறட்டியை எரிப்பதன் மூலம் உண்டாகும் புகையை சுவாசிப்பதின் மூலம் நுரையீல் புற்று வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறது மருத்துவ ஆய்வு.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.