2014-08-01 10:46:38

ஆகஸ்ட் 02,2014. புனிதரும் மனிதரே. புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட் (Saint Peter Julian Eymard)


நற்கருணையின் திருத்தூதர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் புனித பீட்டர் ஜூலியன் ஐமார்ட், பிரான்சு நாட்டின் லா முரே பகுதியில் 1811ம் ஆண்டு பிப்ரவரி 4ம் நாள் பிறந்தார். இவர் சிறு வயது முதலே, திருநற்கருணை மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்தார். 1834ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மறைமாவட்ட அருள்பணியாளரானார். சில ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 1839ல் மரியாவின் துறவற சபையில் இணைந்தார். புனித மரியாவின் பக்தியையும் திருநற்கருணை பக்தியையும் பரப்பினார். 1856ம் ஆண்டு, பீட்டர் ஜூலியன் “திருநற்கருணையின் சபை” என்ற துறவு சபையைத் தொடங்கினார். மேலும், 1858ல், அருள்சகோதரி மார்கரெட் குய்லோட் என்பவருடன் இணைந்து, “திவ்விய நற்கருணையின் பணியாளர்கள் சபை” என்ற துறவுச் சபையை இவர் நிறுவினார். இச்சபைகளைச் சார்ந்த துறவிகள், முதல் முறை திருநற்கருணையைப் பெற தங்களையே தயார் செய்யும் சிறுவர், சிறுமியருக்கு மறைக்கல்வி கற்பிப்பதில் ஆர்வமாக உழைத்தார்கள். அடிக்கடி திருநற்கருணை உட்கொள்ளும் வழக்கத்தை கிறிஸ்தவர்கள் நடுவில் ஏற்படுத்த புனித பீட்டர் ஜூலியன் உழைத்தார். அற்புதமான முறையில் திருநற்கருணையில் எழுந்தருளியிருக்கும் இயேசு கிறிஸ்துவுக்கு தனது வாழ்வையே அர்ப்பணித்த பீட்டர் ஜூலியன் ஐமார்ட், 1868ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி இறைவனடி சேர்ந்தார்.
1962ம் ஆண்டு டிசம்பர் 9ம் நாள், புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இவரை புனிதர் என அறிவித்தார். இவரது கல்லறைத் தோண்டப்பட்டபோது இவருடைய உடல் அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இவரது விழா ஆகஸ்ட் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.