2014-07-31 16:02:32

புனிதரும் மனிதரே : இறையழைத்தல் எப்படியும் வரலாம்(St. Alphonsus Liguori)


குடும்பத்தில் மூத்தவராகிய அல்போன்ஸ் மரிய லிகோரி, தனது வயதுக்கு மிஞ்சிய அறிவைக் கொண்டிருந்தார். 16 வயதிலே, 1713ம் ஆண்டு சனவரி 21ம் தேதியன்று வழக்கறிஞர் படிப்பை முடித்தார். 19வது வயதில் நீதிமன்றங்கள் ஏறினார். 27 வது வயதில் நேப்பிள்ஸ் மாநில வழக்கறிஞர் கழகத்தின் தலைவரானார். இவர் வாதிட்ட எந்த வழக்குகளும் தோற்றதே இல்லை. ஆயினும், 1723ம் ஆண்டில் ஒருநாள் நேப்பிள்ஸ் பிரபு ஒருவருக்கும், டஸ்கன் பிரபு ஒருவருக்கும் இடையே 5 இலட்சம் டாலர் பெறுமான சொத்து வழக்கில் அல்போன்சும் வாதாட வேண்டியிருந்தது. அன்று அவர் தனது சாட்சியைக் கூப்பிடுவதற்கு முன்னதாகவே அவரது வாதத்தில் பிழை இருந்ததாக எதிர்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இந்தத் தோல்வி அவரை வெட்கித் தலைகுனிய வைத்தது. “உலகே, உன்னைத் தெரிந்து கொண்டேன், நீ இனிமேல் என்னைப் பார்க்க மாட்டாய்”என்று சொல்லி நீதிமன்றத்தைவிட்டுக் கிளம்பினார். மூன்று நாள்கள் சாப்பிட மறுத்துவிட்டார். இந்தத் தலைகுனிவானது, இவர் தனது உலகப் பெருமைகளை உதறி இறைவனைப் பற்றிக்கொள்வதற்கு அனுப்பப்பட்ட ஓர் இகழ்ச்சியாக உணர்ந்தார். தனது 27வது வயதில் வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு செபத்திலும் பிறரன்புப் பணிகளிலும் இறைவனின் விருப்பத்தைத் தேடினார். 1726ம் ஆண்டில் இவர் குருவானார். அருள்பணி அல்போன்ஸ் மரிய லிகோரி, 1732ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி உலக மீட்பர் சபையைத் தொடங்கினார். 79வது வயதில் செவித்திறனையும், கண்பார்வையையும் இழந்தார். 1780ம் ஆண்டில் பெரியதொரு சோதனையைச் சந்தித்தார் இவர். நேப்பிள்ஸ் அரசன் இவரது துறவற சபை ஒழுங்குகளை அங்கீகரிப்பதில் காலம் கடத்தினார். இந்தச் சபை எப்போதும் எந்தச் சொத்தின்மீதும் உரிமை கொண்டாடக் கூடாது என்ற நிபந்தனையை வகுத்தார். புனித அல்போன்சும் தனது ஒப்புதலை அளித்தார். ஆனால் அரண்மனையில் வேலை செய்த ஓர் உயர் அதிகாரி எவருக்கும் தெரியாமல் இந்தச் சட்டத்தின் நிபந்தனையை மாற்றி எழுதிவிட்டார். அல்போன்சும் முதிர்ந்த வயதில் பார்வையிழந்த நிலையில் எதுவும் அறியாதவராக அதில் கையெழுத்துப் போட்டார். சபையில் பெரும் சிக்கலும் பிளவும் ஏற்பட்டன. 83ம் வயது வரை இவரை சபையிலிருந்து நீக்கி வைத்தனர். நேப்பிள்ஸைச் சார்ந்தவர்கள் இவருடன் தொடர்புகொள்ள வேண்டாமென்று அப்போதைய திருத்தந்தையே கட்டளையிட்டார். நோயின் வேதனையோடு இந்தக் கொடுமையையும் தாங்கிக்கொண்டார். ஆயினும் இந்தப் பிளவு புனித அல்போன்ஸ் இறக்கும்வரைத் தீர்க்கப்படவே இல்லை. இப்புனிதரின் விழா ஆகஸ்ட் 1. முன்கோபமும் பக்தியும் மிக்கவரான இவரது தந்தை ஜோசப் லிகோரி, தனது மூத்த மகனிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டார். தினமும் மூன்று மணிநேரம் சுரமண்டல இசைக்கருவியைக் கற்க வைத்தார். அல்போன்ஸ், தனது 13வது வயதிலே சுரமண்டலத்தை மீட்டுவதில் வல்லவரானார். பள்ளிக்குச் செல்லாமல் தனது தந்தையின் கண்எதிரிலேயே கல்வி பயின்றவர் புனித அல்போன்ஸ் மரிய லிகோரி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.