2014-07-31 16:47:42

தென் ஆப்ரிக்க ஆயர் பேரவை, இலத்தீன் முதுபெரும் தந்தை Fouad Twal அவர்களுக்கு அனுப்பியுள்ள ஆதரவு மடல்


ஜூலை,31,2014. பாலஸ்தீன மக்கள் ஒவ்வொரு நாளும் வன்முறைகளை மேலும், மேலும் சந்தித்து வருவதைக் காணும் இவ்வேளையில், எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் பகிர்ந்துகொள்கிறோம் என்று தென் ஆப்ரிக்க ஆயர் பேரவை, இலத்தீன் முதுபெரும் தந்தை Fouad Twal அவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளது.
இனவெறியிலிருந்து மீண்டு வந்துள்ள தென் ஆப்ரிக்க மக்கள் என்ற முறையில், இஸ்ரேல், பாலஸ்தீன இனங்களுக்கிடையே நிகழும் மோதல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றுரைத்த தென் ஆப்ரிக்க ஆயர்கள், இந்த இன மோதல்கள் முடிவுக்கு வர தங்கள் இடைவிடா செபங்களை உறுதியளித்துள்ளனர்.
குறிப்பாக, காசாப் பகுதியில் உள்ள திருக்குடும்ப கத்தோலிக்கப் பங்கைச் சேர்ந்த மக்களை, தாங்கள் ஒவ்வொரு நாளும் எண்ணி, செபித்து வருவதாகவும் ஆயர்கள் தங்கள் மடலில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயர்கள் சார்பில் இம்மடலை அனுப்பியுள்ள Cape Town பேராயர் Stephen Brislin அவர்கள், தானும், ஆயர் பேரவைப் பிரதிநிதிகளும் இவ்வாண்டு சனவரியில் காசாப் பகுதியில் மேற்கொண்ட பயணத்தை அன்புடன் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.