2014-07-31 16:47:08

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்குக் கடமைப் பட்டுள்ளோம் - முதுபெரும் தந்தை Gregory III


ஜூலை,31,2014. அரேபியக் கலாச்சாரத்தை இதுவரை இணைந்து வளர்த்துவந்த கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்குக் கடமைப்பட்டுள்ளோம் என்று கிரேக்க மெல்கத்திய வழிபாட்டு முறையின் முதுபெரும் தந்தை, மூன்றாம் கிரகரி லஹாம் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
அண்மையில் முடிவுற்ற இரமதான் மாத இறுதி நாளன்று, இஸ்லாமிய உடன் பிறந்தோருக்குச் செய்தி அனுப்பியுள்ள அந்தியோக்கு முதுபெரும் தந்தை லஹாம் அவர்கள், வருங்காலத் தலைமுறையினர் ஒன்றிணைந்து உருவாக்கப்போகும் எதிகாலத்திற்கு நாம் வழியமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிரியா, ஈராக், பாலஸ்தீனம், காசாப் பகுதி ஆகியவை அனுபவித்து வரும் துன்பங்களைப் போலவே, எகிப்து, மொராக்கோ, ஏமன் ஆகிய நாடுகளும் துன்புற்று வருகின்றன என்பதை, முதுபெரும் தந்தை லஹாம் அவர்கள், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு பிரச்சனைகள் மத்தியில், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து, அரேபியக் கலாச்சாரத்தை வளர்த்து வந்துள்ளோம் என்பதைச் சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை லஹாம் அவர்கள், அடிப்படைவாதக் குழுக்களால், இந்த அழகியக் கலாச்சாரம் சீரழிவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் இணைந்து வாழ வேண்டும், இணைந்து வாழ முடியும், இணைந்து வாழ விரும்புகிறோம் என்ற வார்த்தைகளுடன், முதுபெரும் தந்தை லஹாம் அவர்கள், தன் இரமதான் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.