2014-07-31 16:51:22

ஈராக் கிறிஸ்தவர்களைக் காப்பாற்ற அமெரிக்க ஆயர்கள் பேரவை, அரசுத் தலைவரிடம் விண்ணப்பம்


ஜூலை,31,2014. ஈராக்கில் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறைகளைத் தடுக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை, அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களிடம் விண்ணப்பித்துள்ளது.
ஈராக்கின் வட பகுதியில் வன்முறைகளை மேற்கொண்டுள்ள அடிப்படைவாதக் குழுவினர், கட்டுப்பாடற்ற முறையில் நடந்துகொள்கின்றனர் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதிப் பணிக்குழுவின் ஆயர் Richard Pates அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்து செல்லும் மக்களுக்குப் புகலிடம் தருவதென்ற முடிவை, பிரெஞ்ச் அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் தஞ்சம் புகும் சிறுவர், சிறுமியரையும், வளர் இளம் பருவத்தினரையும் மீண்டும் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பாமல், வேறு வழிகளைத் தேடவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் அமெரிக்க ஆயர் பேரவை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் நிலவும் கடுமையானச் சூழல்களிலிருந்து தப்பித்துவரும் இளம்பருவத்தினரை, மீண்டும் அதே சூழல்களுக்கு உள்ளாக்குவது மனிதாபிமானச் செயல் அல்ல என்று ஆயர் பேரவை கூறியுள்ளது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.