2014-07-30 15:59:21

மத்தியக் கிழக்குப் பகுதி பிரச்சனைக்குத் தீர்வு காண திருப்பீடம் மேற்கொண்டுவரும் முயற்சிகள்


ஜூலை,30,2014. மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதியை உறுதி செய்யும் முயற்சிகளை அனைத்து நாடுகளும் மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை, திருப்பீடத்துடன் தூதரக உறவுகள் கொண்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் திருப்பீடம் அனுப்பியுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பன்னாட்டு உறவுகள் துறையின் திருப்பீடச் செயலர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், கடந்த ஞாயிறன்று திருத்தந்தை மூவேளை செப உரையின் இறுதியில் வழங்கிய உணர்வு மிகுந்த விண்ணப்பத்தை அனைத்துத் தூதரகங்களுக்கும் அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் பணியாற்றும் திருஅவைத் தலைவர்கள், அருள் பணியாளர்கள், துறவறத்தார் அனைவருக்கும் திருத்தந்தை தன் செபம் கலந்த ஆதரவை அவ்வப்போது உறுதி செய்வதுடன், அங்கு மேற்கொள்ளப்படும் துயர் துடைப்புப் பணிகளுக்கு நிதி உதவிகளையும் அனுப்பி வருகிறார் என்று பேராயர் மம்பெர்த்தி அவர்கள் குறிப்பிட்டார்.
தங்களுடன் தூதரக உறவுகள் கொண்டுள்ள அனைத்து நாடுகள் வழியாகவும், மத்தியக் கிழக்குப் பகுதி பிரச்சனைக்குத் தீர்வு காண திருப்பீடம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் பேராயர் மம்பெர்த்தி அவர்கள் தன் பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.