2014-07-30 14:56:57

ஜூலை 31,2014. புனிதரும் மனிதரே........ புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் புனித லாரா (St. Laura of Saint Catherine of Siena)


1874ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி கொலம்பியா நாட்டிலுள்ள ஜெரிகோ எனுமிடத்தில் பிறந்தார் லாரா மொன்டோயா யுபேகுயி. நாட்டிற்கானப் போராட்டத்தில் தன் தந்தையை சிறு வயதிலேயே இழந்த இவர், தன் தாயைப் பராமரிப்பதற்காக பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார். திருநற்கருணை பக்தி முயற்சியிலும், விவிலியச் சிந்தனைகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், காலணிகள் அணியா கார்மல் துறவு சபையில் இணைய வேண்டும் என ஆவல் கொண்டார். ஆனால், துறவு வாழ்வோடு சமூகப்பணி அர்ப்பண வாழ்வும் இணைந்திருக்க வேண்டும் எனவும், தென் அமெரிக்க பூர்வீகக் குடிமக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காக உழைக்கவேண்டும் எனவும் ஆவல்கொண்ட லாரா, தன் 40ம் வயதில் மேலும் 4 பெண்களோடு இணைந்து,தென் அமெரிக்க பூர்வீகக் குடிமக்கள் பகுதிக்குச் சென்று அவர்களோடு ஒருவராக வாழ்ந்தார். அவர்களுக்கு ஆன்மீக மற்றும் சமூகப்பணி ஆற்றுவதற்கென, 'மாசற்ற மரியா மற்றும் சியன்னா நகர் புனித கத்ரீனாவின் மறைப்பணியாளர்கள்' சபையையும் உருவாக்கினார். இதனால் புனித சியன்னா நகர் கத்ரீனம்மாவின் லாரா என்ற பெயர் பெற்றார். தன் வாழ்வின் இறுதி 9 ஆண்டுகள் உடல் சுகவீனமுற்று இருந்தாலும், சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே சபையை வழிநடத்தினார். 1949ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி இறைபதம் சேர்ந்தார் புனித லாரா. 2004ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் அருளாளராகவும், 2013 மே 12ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராகவும் அறிவிக்கப்பட்டார் புனித சியன்னா நகர கத்ரீனம்மாவின் புனித லாரா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.