2014-07-30 16:01:58

ஏவுகணைத் தாக்குதலில், காசாப் பகுதி பங்குக் கோவிலும், அருகில் உள்ள கத்தோலிக்கப் பள்ளியும் சேதம்


ஜூலை,30,2014. இச்செவ்வாயன்று இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில், காசாப் பகுதியில் உள்ள திருக்குடும்ப பங்குக் கோவிலும், அருகில் உள்ள கத்தோலிக்கப் பள்ளியும் சேதமடைந்துள்ளன என்று இப்பங்கில் பணியாற்றும் அருள் பணியாளர் Jorge Hernandez அவர்கள் கூறினார்.
இச்செவ்வாய் மதியம், இஸ்ரேல் இராணுவம் இத்தாக்குதலைக் குறித்து அப்பகுதியில் வாழும் மக்களுக்கு SMS வழியே செய்திகள் அனுப்பியதாகவும், அதைத் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் அருள் பணியாளர் Hernandez அவர்கள் Fides செய்தியிடம் கூறினார்.
பங்குக் கோவிலுக்கு அருகில் அமைந்திருந்த ஒரு வீடு இஸ்ரேல் இராணுவத்தின் இலக்காக அமைந்தது என்றும், இத்தாக்குதலில் அவ்வீடு முற்றிலும் அழிந்தபோது, அருகிலிருந்த பங்குக் கோவிலும், பள்ளியும் சேதமடைந்தன என்றும் அருள் பணியாளர் Hernandez அவர்கள் குறிப்பிட்டார்.
திருக்குடும்பப் பங்குக் கோவிலில் தற்போது மாற்றுத் திறன் கொண்ட 29 குழந்தைகளும், 9 முதியவர்களும் தங்கியுள்ளனர் என்றும், இவர்களைக் கண்காணிக்கும் அன்னை தெரேசா சகோதரிகளும் அங்குள்ளனர் என்றும் அருள் பணியாளர் Hernandez அவர்கள் மேலும் கூறினார்.
இதற்கிடையே, காசாப் பகுதியில் தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல் இராணுவம் துண்டு பிரசுரங்களை அப்பகுதியில் கொடுத்துள்ளதைத் தொடர்ந்து, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் தாக்குதல்களை நிறுத்துமாறு மீண்டும் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : Fides / UN








All the contents on this site are copyrighted ©.