2014-07-28 16:28:17

திருத்தந்தை : நம் வாழ்வில் இறைவன் ஆட்சி புரியும்போது அங்கு அன்பு, அமைதி மற்றும் மகிழ்வே நிரம்பியிருக்கும்


ஜூலை,28,2014. இயேசு கூறிய புதையல், மற்றும் விலை உயர்ந்த முத்து குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவைகளுக்காக விவசாயியும் வணிகரும் தங்கள் ஏனைய சொத்துக்களையெல்லாம் விற்று இவைகளைப் பெற்றதுபோல், விண்ணரசிற்காக நாம் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கவேண்டும் என்றார்.
இயேசுவை தனிப்பட்ட முறையில் சந்திப்பவர்கள் அவரின் கருணையாலும், உண்மையாலும், அழகாலும் எளிமை மற்றும் தாழ்ச்சியாலும் கவரப்பட்டு அனைத்தையும் துறக்கத் தயாராக இருக்கிறார்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கு உதாரணமாக அசிசியின் புனித பிரான்சிஸையும் காண்பித்தார். மிகுந்த ஆழமில்லாத ஒருவித மேம்போக்கான கிறிஸ்தவராக இருந்த புனித பிரான்சிஸ், விவிலியத்தை வாசித்து, இயேசுவையும் சந்தித்தபின் உலகுப்போக்குகளை முற்றிலுமாகக் கைவிட்டு இறையரசை பலமாகப் பற்றிக்கொண்டார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் தேடும் புதையலும் முத்தும் இறையரசே என்பதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் நற்செய்தியைப் படிக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
நம் வாழ்வில் இறைவன் ஆட்சி புரியும்போது அங்கு அன்பு, அமைதி மற்றும் மகிழ்வே நிரம்பியிருக்கும் எனவும் ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரன்ன்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.