2014-07-28 16:28:48

திருத்தந்தை : தீமைக்கும், வன்முறைக்கும் அடக்குமுறைகளுக்கும் துணிச்சலுடன் மறுப்புக் கூறுங்கள்


ஜூலை,28,2014. உரோம் நகருக்கு தென்பகுதியிலுள்ள கசெர்த்தா எனுமிடத்திற்கு சனிக்கிழமையன்று மாலை திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, இறையரசை அடைய விரும்புவோர், தீமைக்கும், வன்முறைக்கும் அடக்குமுறைகளுக்கும் துணிச்சலுடன் மறுப்புக்கூறி, இறைவனின் நண்பர்களாக மாறி, சகோதரர்களை அன்புகூர்பவர்களாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கசெர்த்தாவின் மூன்றாம் கார்லோ என்ற வளாகத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருக்க, அவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் சகோதர சகோதரிகளின் வாழ்வையும் நலத்தையும் பாதுகாப்பதில் நம்மை அர்ப்பணிப்பதோடு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பிலும் நம் பொறுப்புணர்வுகளை உணர்ந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
எத்தனை துன்பங்கள் மத்தியிலும் நம்பிக்கைகளை கைவிடாமல் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை என்பது ஒருநாளும் நம்மை ஏமாற்றுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், அதேவேளை உங்கள் நம்பிக்கையை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள எவரையும் அனுமதிக்காதீர்கள் எனவும் கூறினார்.
புதையல் மற்றும் விலையுயர்ந்த முத்து குறித்த உவமைகளையும் தன் மறையுரையில் மேற்கோள்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த முதல் உவமையில் வரும் விவசாயியைப்போல் திடீரெனவும் சிலர் இறைவனைக் கண்டுகொள்ளலாம், முத்து உவமையில் வரும் வணிகரைப்போல் பல காலம் தேடியும் கண்டுகொள்ளலாம் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.