2014-07-26 14:34:35

பொதுக்காலம் 17ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 மூன்றாவது வாரமாக, ஞாயிறு நற்செய்தி வாசகங்கள், நம்மை வயல்வெளிக்கு அழைத்து வந்துள்ளன. முதல் வாரம், நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளைப் பற்றியும், இரண்டாவது வாரம், விதைகளோடு விதைக்கப்பட்ட களைகளைப் பற்றியும் சிந்தித்த நாம், இன்று, நிலத்தில் மறைந்து கிடக்கும் புதையலைப் பற்றிச் சிந்திக்க அழைப்பு பெற்றுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில் மூன்று உவமைகளைக் காண்கிறோம். புதையல், முத்து, மீன்கள் நிறைந்த வலை என்ற இம்மூன்று உவமைகளையும் இறையரசுக்கு ஒப்புமைப்படுத்துகிறார் இயேசு. புதையல், முத்து, வலை என்ற மூன்று உருவகங்களும் பல்வேறு சிந்தனைகளை மனதில் எழுப்புகின்றன. வலைபற்றிய உவமைக்கு இன்றைய நற்செய்தியில் முழு விளக்கமும் தரப்பட்டுள்ளது. எனவே, நமது சிந்தனைகளை புதையல், முத்து என்ற மற்ற இரு உவமைகள் பக்கம் திருப்புவோம்.

மனித வரலாற்றில், 'புதையல்' என்ற சொல், பொதுவாக பூமியிலிருந்து கிடைக்கும் அரியக் கருவூலங்களைக் குறிக்கும். இந்த அரியக் கருவூலங்களில் ஒன்றாக அடிக்கடிப் பேசப்படுவது, வைரம். உலகின் பல நாடுகளில், பூமிக்கடியிலிருந்து கிடைத்துள்ள வைரங்கள், அரச மகுடங்களில் பதிக்கப்பட்டுள்ளன. வைரங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை ஆய்வு செய்தால், அது, இறையரசைப் பற்றிய அழகிய எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றன.
வைரத்தை குறிப்பிடும் 'diamond', என்ற ஆங்கிலச் சொல், 'உடைக்க முடியாத' என்ற பொருள்படும் 'adamas' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. உடைக்க முடியாத வைரத்தைப் போல, இறையரசும் உடைக்கமுடியாத உறுதி பெற்றது என்பது நாம் பெறும் முதல் தெளிவு.
அதிக மதிப்பின்றி, காலடியில் மிதிபடும் நிலக்கரியே வைரமாக மாறுகிறது என்பது நாம் கற்றுக்கொள்ளும் அடுத்த வியப்பான பாடம். பூமிக்கடியில் புதையுண்டு போகும் நிலக்கரி, அங்கு நிலவும் மிக உயர்ந்த அழுத்தம், மிக அதிகமான வெப்பநிலை ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, வைரமாக மாறுகின்றது. எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தமும், வெப்பமும் கூடுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அங்கு உருவாகும் வைரமும் உயர்ந்த தரமுள்ளதாக மாறுகின்றது. அதேபோல், வாழ்வில் அழுத்தமும், வெப்பமும் கூடும் வேளைகளில், இறையரசின் விலைமதிப்பற்ற மதிப்பீடுகளும் மனதில் உருவாகின்றன என்பது, வைரமாகும் நிலக்கரி நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

வைரத்திலிருந்து நம் எண்ணங்கள் முத்தை நோக்கித் திரும்புகின்றன. ஆழ்கடலில் வாழும் சிப்பிக்குள் உருவாகும் அரியக் கருவூலம், முத்து. முத்து உருவாகும் விதமும் நமக்கு இறையரசின் மற்றொரு பண்பைச் சொல்லித் தருகிறது. வெளி உலகிலிருந்து, சிப்பிக்குள் நுழையும் அன்னியத் துகளோ, துளியோ சிப்பிக்குள் மாற்றங்களை உருவாக்குகின்றன. உத்தரவின்றி உள்ளே நுழைந்துவிடும் வேற்றுப் பொருளைச் சுற்றி, சிப்பி உருவாக்கும் காப்புக் கவசமே விலையேறப்பெற்ற முத்தாக மாறுகிறது.
அதேபோல், நன்னெறிகளுக்கு எதிராக, உத்தரவின்றி நுழையும் எதிர்மறை எண்ணங்களையும், கருத்துக்களையும், இறையரசு என்ற சிப்பி, அழகிய முத்தாக மாற்றும் வலிமை பெற்றது என்பதை, நாம் முத்து உவமையிலிருந்து கற்றுக் கொள்கிறோம்.

புதையலும், முத்தும் நமக்கு மற்றொரு பாடத்தையும் சொல்லித் தருகின்றன. புதையலும், முத்தும் தன்னிலேயே மதிப்பு மிக்கவை என்றாலும், யாராவது ஒருவர் அவற்றைக் கண்டெடுக்கும்போதுதான் அவற்றின் மதிப்பு முழுமையாக வெளிப்படும். பூமிக்கடியில், மண்ணில் புதைந்திருக்கும் புதையலுக்கோ, ஆழ்கடலில் சிப்பிக்குள் சிறைப்பட்டிருக்கும் முத்துக்கோ மதிப்பில்லை. எப்போது அவை ஒருவருடைய கவனத்தை ஈர்க்கின்றனவோ, அப்போதுதான் அவற்றின் மதிப்பு வெளிப்படுகின்றது. அதேபோல், இறையரசு என்ற உண்மை உலகெங்கும் பரவியிருந்தாலும், அதைக் கண்டுணரும் மனிதர்கள் வழியே அதன் முழு மதிப்பும் வெளிப்படுகிறது.

‘மதிப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. நம்மில் பலர் 'மதிப்பு' என்ற வார்த்தையை, 'விலை' என்ற வார்த்தையுடன் இணைத்திருப்போம். ஒரு பொருள், ஒரு செயல், ஒரு கருத்து இவற்றின் மதிப்பை இவ்வுலகம் 'விலை' என்ற அளவுகோலை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
இன்றைய உலகில் எல்லாவற்றிற்கும் விலை குறிக்கப்படுகிறது என்பது மிகவும் வேதனையான போக்கு. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டை புயல், வெள்ளம், சூறாவளி என்ற இயற்கைச் சீற்றங்கள் தாக்கும்போது, அவற்றால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பற்றிப் பேசும் அதே மூச்சில், அந்த இயற்கைப் பேரிடரால் உருவான அழிவுகள் இவ்வளவு மில்லியன் டாலர்கள் என்ற கணக்கும் பேசப்படுகிறது.
நாட்டில் நிகழும் விபத்து, தீவிரவாதிகளின் தாக்குதல், கொள்ளை நோய், வறட்சி என்ற அனைத்தும் பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. அதேபோல், ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட தலைவர் தேர்தலில் வென்றாலோ அல்லது தோற்றாலோ, அதுவும் பங்குச் சந்தை குறியீட்டைக் கொண்டு பேசப்படுகிறது.

இவ்விதம் உலக நிகழ்வுகள் அனைத்திற்கும் விலை பேசப்படுவதால், நமது எண்ண ஓட்டங்கள், வர்த்தகப் பாணியிலேயே அதிகம் செல்கின்றன. அன்பு, நேர்மை, தியாகம் போன்ற ஏனைய உன்னதமான அளவு கோல்களை நாம் படிப்படியாக மறந்துவருகிறோம்.
வர்த்தக உலகின் அளவுகோல்களைக் கொண்டு, வாழ்வின் அனைத்து உண்மைகளையும் அளக்கும்போது, அங்கு, இலாபம், நஷ்டம் என்ற கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. உபயோகமானவை, உபயோகமற்றவை என்று தரம் பிரிக்கப்படுகின்றன. இலாபம், நஷ்டம் என்ற கண்ணோட்டத்தில் வாழ்வின் உறவுகளை அளப்பது ஆபத்திற்கு அழைத்துச் செல்கிறது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, வயது முதிர்ந்தவர்கள் உபயோகமற்றவர்கள், அவர்களால் எவ்வித இலாபமும் இல்லை. அதேபோல், நோயுற்றோர், அதிலும் குறிப்பாக, தீராத நோயுற்றோர் எவ்வகையிலும் உபயோகமற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றனர். 'தூக்கியெறியும் கலாச்சார'த்தால் இவ்வுலகம் எவ்வளவு தூரம் சிதைந்து வருகிறது என்பதை திருத்தந்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கூறி வருகிறார். அதேபோல், வர்த்தக உலகின் இலாப, நஷ்ட அடிப்படையில் நமது உறவுகள் மாறிவருவதைக் குறித்தும் திருத்தந்தை அவ்வப்போது வருத்தத்துடன் எச்சரித்து வருகிறார்.

புதையல், முத்து, இவற்றின் மதிப்பை உணர்ந்த இருவர், தங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து அவற்றைப் பெற்றனர் என்று இன்றைய நற்செய்தியில் கேட்கும்போது, உன்னதமானவற்றை நாம் பெறுவதற்கு, அனைத்தையும் தியாகம் செய்யும் துணிவு வேண்டும் என்பதை உணர்கிறோம். இலாப, நஷ்டம் பார்த்து, அனைத்தையும் பேரம் பேசி வாழும் இவ்வுலகப் போக்கு, இத்தகைய துணிச்சலான முடிவை எடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.

உள்ளார்ந்த உண்மை மதிப்பை உணர்ந்தால், அதற்காக எதையும் இழக்க நாம் துணிவு கொள்வோம். பெரும்பாலான நேரங்களில் நம்மிடம் புதைந்துள்ள, நம் குடும்பங்களில் புதைந்துள்ள மதிப்புக்களை உணராமல், நாம் வாழ்ந்து வருகிறோம். நம் கண்முன்னே முத்துக்களும், புதையல்களும் அடிக்கடி தோன்றினாலும், அவற்றைக் காணும் பக்குவம் இல்லாமல், நாம் குழம்பி நிற்கிறோம். இதனை வலியுறுத்த இதோ சில கதைகள்:

Olavo Bilac என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள் அவரது நண்பர் அவரைத் தேடி வந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Bilacஇடம் கேட்டுக்கொண்டார். Bilac பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:
"ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழல் நிம்மதி தரும்" என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் Olavo Bilac.
ஒரு சில வாரங்கள் சென்று அவர் தன் நண்பரைச் சந்தித்தார். "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்று அறிந்து கொண்டேன். அதை நான் விற்கப் போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.
நம்மைப்பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப்பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்து நமது நல் வாழ்வு, நமது நல வாழ்வு அமையும்.

கடலில் பயணம் செய்துகொண்டிருந்த கப்பலொன்று தரைதட்டி நின்றது. ஒரு வாரமாக முயன்றும் கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. கப்பல் பயணிகளிடமிருந்த குடிநீர் முற்றிலும் தீர்ந்துவிட்டது. அவர்கள் தாகத்தால் துடித்தனர்.
அப்போது அவ்வழியே வந்த மற்றொரு கப்பலில் இருந்தவர்களிடம், "எங்களுக்குக் குடிநீர் தேவை" என்ற செய்தியை அனுப்பினார் கப்பல் தலைவர். "நீங்கள் இருக்கும் இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்துப் பருகுங்கள்" என்ற பதில் செய்தி வந்தது. கப்பல் தலைவருக்குக் கடும்கோபம். கடல் நீரைக் குடிக்கச் சொல்வதற்கு இவர்கள் யார் என்று அவர் வெறுப்புடன் கீழ்த்தளத்திற்குச் சென்றார். அவர் சென்றபின், அருகிலிருந்த உதவியாட்களில் ஒருவர் தங்கள் கப்பல் நின்ற இடத்தில் வாளியை இறக்கி, நீர் எடுத்தார். அந்த நீரை அவர் சுவைத்தபோது, அது சுத்தமான குடி நீர் என்பதை உணர்ந்தார். அந்தக் கப்பல் தரைதட்டி நின்ற இடம், பெரும் நதியொன்று கடலில் கலந்த 'டெல்டா' பகுதி என்பதை கப்பலில் இருந்தவர்கள் உணரவில்லை. சக்தியோடு பாய்ந்த நதி நீர், கடல் நீரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளிவிட்டிருந்தது. சுவையான குடிநீர் தங்களைச் சூழ்ந்திருந்தபோதும், கப்பலில் இருந்தவர்கள் தாகத்தால் தவித்தனர்.
ஊரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார் ஒருவர். பல ஆண்டுகள் அதே இடத்தில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர், ஒருநாள் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் கிடைத்தது.

புதையலுக்கு மேல் அமர்ந்துகொண்டு வாழ்நாள் முழுவதும் தர்மம் கேட்ட இவரைப் போல, நல்ல நீர் சூழ்ந்திருந்த நீர்பரப்பில் நின்றுகொண்டே தாகத்தால் துடித்த கப்பல் பயணிகளைப் போல, தன் பண்ணை வீட்டின் அழகை, அடுத்தவர் சொன்ன வார்த்தைகளைக் கொண்டு புரிந்துகொண்ட மனிதரைப் போலத்தான் நாமும்... வாழ்வில் நம்மைச் சூழ்ந்துள்ள எத்தனையோ நன்மைகளை உணராமல், நமக்குள் புதைந்திருக்கும் கருவூலங்களைத் தெரிந்துகொள்ளாமல் தாகத்தில், தேவையில் துடிக்கிறோம். நம்முள் ஊற்றெடுக்கும் நன்மைகளைப் புரிந்துகொள்ளாமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில் இந்தப் பொய்யான மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று நம்மிடம் உள்ள புதையல்களை, முத்துக்களை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.
இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ள புதையலையும், முத்தையும் அடையாளம் காணும் தெளிவை, இறைவன் நமக்கு வழங்க மன்றாடுவோம். நாம் அடையாளம் கண்ட கருவூலங்களைப் பெறுவதற்கு எத்தகையத் தியாகத்தையும் செய்யும் துணிவையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

இறுதியாக, அன்புள்ளங்களே, ஜூலை 28, இத்திங்கள், உலக வரலாற்றில் ஒரு முக்கிய நாள் என்பதால், நமது சிந்தனைகளை இத்திங்களை நோக்கித் திருப்புவோம். 1914ம் ஆண்டு, ஜூலை 28ம் தேதி, முதல் உலகப் போர் துவங்கியது. 90 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்த அந்தப் போரின் எதிரொலிகள் இன்னும் இவ்வுலகில் ஓயவில்லை. காசாப் பகுதியில் குடிமக்களைக் கொல்லும் இஸ்ரேல், பாலஸ்தீன வன்முறைக் குழுக்களின் வெறி இன்னும் தீர்ந்ததுபோல் தெரியவில்லை. கடந்த பத்து நாட்களில், உக்ரைன், தாய்வான், மாலி நாடுகளில் நிகழ்ந்துள்ள விமான விபத்துக்களில் ஏறத்தாழ 600 உயிர்கள் பலியாயின.
இவ்வுலகில் அமைதி ஆட்சி செய்யவேண்டுமெனில், ஆட்சியில் இருப்போர், அமைதி பெறவேண்டும்; அமைதியின் சக்தியை உணரும் அறிவுத்திறன் பெறவேண்டும். இன்றைய முதல் வாசகத்தில் மன்னன் சாலமோன், நீடிய ஆயுள், செல்வம், எதிரிகளின் சாவு என்ற வரங்களை இறைவனிடம் கேட்காமல், "உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" (1 அரசர்கள் 3: 9) என்று வேண்டியதைப் போல், உலகத் தலைவர்கள், குறிப்பாக, இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளில் மோதல்களில் ஈடுபட்டிருக்கும் அனைவரும், குறிப்பாக, இவ்விரு தரப்பின் தலைவர்கள் உண்மையான ஞானம் பெறவேண்டும் என்று மனமுருகி இறைவனிடம் வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.