2014-07-26 15:23:11

ஈராக் முதுபெரும் தந்தையுடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்


ஜூலை,26,2014. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அநீதியான முறையில் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளிக்கிழமையன்று ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்களுடன் தொலைபேசியில் உரையாடி தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈராக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளால் தொடர்ந்து நடத்தப்படும் அட்டூழியங்களை, ஐ.நா. பாதுகாப்பு அவை சாதாரணப் பார்வையாளர்போல் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்று அண்மை நாள்களாக முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் எச்சரித்து வருகிறார்.
அத்துடன், ISIS முஸ்லிம் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ள இஸ்லாம் நாடு பற்றியும், மோசுல் நகரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவக் குடும்பங்கள் வெளியேறி இருப்பதையும், அப்பகுதியின் நிலைமை பற்றியும் ஐ.நா.வுக்கு விளக்கியுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
இதற்கிடையே, மோசுல் நகரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் இஸ்லாமிய விதிமுறைப்படி சிறுமிகளும் பெண்களும், தங்களின் பிறப்புறுப்பைச் சிதைக்க வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது
பெண்களின் பிறப்புறுப்பைச் சிதைக்கும் வழக்கம் ஈராக்கிய சமூகத்தில் பரவலாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் உறுப்பின் முக்கிய பாகங்களைச் சிதைக்கும் வழக்கத்தை உலகெங்கிலுமிருந்தும் ஒழிக்க வேண்டும் என இலண்டனில் இவ்வாரத்தில் நடந்த மாநாடு ஒன்றில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.